களக்காடு தலையணையில் தொடர் வறட்சி

* சுற்றுலா பயணிகள் கவலை

களக்காடு :  களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை மழை பெய்யாததால் தலையணையில் வறட்சி தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. இங்கு ஓடும் தண்ணீரில் குளுமை அதிகம் என்பதால் இதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டுவர்.

தினசரி ஏராளமானோர் தலையணைக்கு வந்து குளித்து செல்வர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்யவில்லை. மேலும் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் ஆறு, கால்வாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையிலும் கடும் வெயில் காணப்படுவதால் அருவி, நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.

களக்காடு தலையணையில்  தண்ணீர் முற்றிலும் வறண்டுள்ளது.  இதனால் சுற்றுலா பயணிகள் வருகை நின்று விட்டது. தலையணை நீர்வீழ்ச்சி, சிறுவர் பூங்கா, மூங்கில் பாலம், உணவகம், அருங்காட்சியம் போன்ற பகுதிகள் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி   காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

களக்காடு பகுதியிலும் கோடை மழை கொட்டியது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறது.  எனவே வறட்சி நீங்கி தண்ணீர் வரத்து ஏற்பட கோடை  மழை பொழியுமா என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் எதிர்நோக்கி உள்ளனர்.

Related Stories: