ஆயிரம் ஆண்டுகள் பழமையான சேரன்மகாதேவி கோயில் படித்துறையில் திடீர் விரிசல்

வீரவநல்லூர் : சேரன்மகாதேவியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பக்தவச்சலபெருமாள் கோயில் படித்துறையில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பக்தவச்சலபெருமாள் கோயில், நவநீதகிருஷ்ணசாமி கோயில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த கோயில்களை ஒட்டியே நீளமான மற்றும் பழமையான படித்துறையும் அமைந்துள்ளது. பிரசித்திப்பெற்ற பக்தவச்சலபெருமாள் கோயில், பித்ருதோஷ நிவர்த்தி தலமாக திகழ்கிறது. வியதிபாத நாளன்று இங்குள்ள தாமிரபரணியில் புனிதநீராடி சுவாமியை தரிசித்தால் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கி அவர்கள் முக்தியடைவர் என்பது ஐதீகமாகும்.

கடந்த அக்டோபரில் நடந்த தாமிரபரணி மகாபுஷ்கர விழாவில் இப்படித்துறையில் நாடு முழுவதும் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததாலும், மர்மநபர்கள் இரவு நேரங்களில் வெடிபோட்டு மீன் பிடிப்பதாலும் படித்துறையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கூட இந்த படித்துறை, எந்த சேதமும் இன்றி கம்பீரமாக காட்சியளித்தது.

தற்போது மர்மநபர்கள் வெடிவைத்து மீன் பிடிப்பதால் படித்துறை விரிசல் அடைந்துள்ளது. படித்துறையில் ஏற்பட்டுள்ள விரிசலை உடனடியாக சரிசெய்யாவிட்டால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது படித்துறை சரிந்து மண்ணில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்படித்துறையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைத்து அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.

வெடி வைத்து மீன் பிடிப்பதால் சேதமா?

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி சிவக்கொழுந்து கூறுகையில், ‘மர்மநபர்கள் இரவு நேரங்களில் அதிக திறன்கொண்ட வெடிகளை படித்துறை பகுதியில் தண்ணீரில் வெடிக்க செய்து, அதில் ஏற்படும் அதிர்வால் செத்து மடியும் மீன்களை பிடிப்பது அதிகரித்துள்ளது. இதனால் புராதன நினைவுச்சின்னமாக திகழும் படித்துறை சேதமடைந்து வருகிறது. எனவே காவல்துறையினர் இப்பகுதியில் தினமும் ரோந்து மேற்கொண்டு படித்துறையை பாழாக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

Related Stories: