எலக்ட்ரிக் கார்களை இயக்குவோரின் வசதிக்காக பொது இடத்தில் சார்ஜ் செய்ய வசதி ஏற்படுத்தும் பணி தீவிரம்: மத்திய எரிசக்தித்துறை நடவடிக்கை

சென்னை: நாடு முழுவதும் எலக்ட்ரிக் கார்களை இயக்குவோரின் வசதிக்காக பொது சார்ஜிங் வசதியை ஏற்படுத்தும் பணியில் மத்திய எரிசக்தித்துறை தீவிரம் காட்டி வருகிறது. உலக அளவில் வாகனங்களின் பயன்பாடு என்பது அதிகமாக இருக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் என்பது வளர்ந்த நாடுகளில் உள்ளன. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைவாக இருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  

இங்கு நாளுக்கு, நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் ஒரு வாகனம் இருந்தநிலை மாறி தற்போது 4, 5 என அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எங்கு சென்றாலும் வாகனத்திலேயே பலரும் பயணிப்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக நகர்புறங்களில் நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது.

இதனால் சிறிய அளவிலான தூரத்தை அடைவதற்குக்கூட நீண்ட நேரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுஒருபுறம் இருக்க மற்றொருபுறம் அதிகரித்து வரும் வாகனங்களால், காற்று மாசுபாடு ஏற்படுகிறது. அபாயகரமான காற்றை தொடர்ந்து சுவாசிக்கும் மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகையால் வெப்பம் அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில், எலக்ட்ரிக் கார்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியாக பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியம் இருக்காது என்ற மற்றொரு காரணமும் இருக்கிறது.

இதையடுத்து ‘நேஷனல் எக்ட்ரிக் மொபிலிட்டி மிஷன் பிளான் (என்இஎம்எம்பி) 2020’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எலக்ட்ரிக் கார்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. மேலும் இவ்வகையிலான கார்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இவ்வாறான வாகனங்கள் மின்சாரம் மூலம் மட்டுமே இயங்கும் என்பதால் அதற்கு ஆங்காங்கு, சார்ஜிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதன்மூலம் மட்டுமே எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக இயக்க முடியும். இதைக்கருத்தில் கொண்டு அந்தவசதியை ஏற்படுத்தத்தேவையான நடவடிக்கையில் மத்திய எரிசக்தித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

 

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

எலக்ட்ரிக் கார்களை அதிகமாக பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு தீவிரம் காட்டிவருகிறது. பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு எப்படி பங்க் வசதி தேவையோ, அதேபோல் எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜிங் வசதி தேவை. இதற்காக சாலையோரங்களில் சார்ஜிங் பாயின்ட்டுகள் ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையில் தற்போது நடந்து வருகிறது. டெல்லியில் கடந்தவாரம் எரிசக்தித்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது சாலை வரைபடத்தை வைத்து எங்கெல்லாம் சார்ஜிங் வசதி ஏற்படுத்தலாம், அதற்கு தேவையான வசதிகள் என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற இடங்களிலும் இந்தவசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிறுவனங்கள் ஆர்வம்:

இந்தியாவில் எலக்ட்ரிக்கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அத்தகைய கார்களை அதிகமாக தயாரித்து இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்குத்தேவையான நடவடிக்கையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Stories: