உணவின் ஒரு பகுதியான கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்: கள் இயக்கம் கோரிக்கை

சென்னை: உணவின் ஒரு பகுதியான கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை அகற்ற வேண்டும் என்று கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மதுவிலக்கும், மதுக்கொள்கையும் மாநில அரசின் அதிகார பட்டியலில் உள்ளது. தமிழ்நாட்டில் அரசே முன்னின்று சீமைச்சாராயங்களை டாஸ்மாக் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. வெவ்வெறு பெயர்களை கொண்டிருக்கும் மதுக்களின் ஒரே மூலப்பொருள்கள் சர்க்கரை ஆலைக்கழிவு மொலாசிஸ் ஆகும். திராட்சையிலிருந்து பிராந்தியும், தானியங்களிலிருந்து விஸ்கியும், கரும்பு சாற்றிலிருந்து ரம்மும், உருளைக்கிழங்கிலிருந்து வோட்கவும் தயாரிக்கப்படுகிறது.

மதுவின் பெயர் மூலப்பொருள் ஆகும். தமிழ்நாட்டில் மொலாசிஸ் மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தரக்குறைவான மதுக்கள், வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு எனச்சொல்லி அரசே வெவ்வேறு பெயர்களில் சந்தைப்படுத்தி வருகின்றது. அது மக்களை, ஏமாற்றும் மக்கள் விரோத செயல் ஆகும். கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தை அரசு மக்களுக்கு மதுஎன்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டை கள் இயக்கம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை மதுக்களில் பெரும்பாலானவை பனை, தென்னை பொருட்களை மூலப்பொருட்களாகக் கொண்டுள்ளன. இவை உள்நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப்படுத்தப்படுகிறது.

உலக அளவில் மதுவிலக்கு தோற்றுப் போயிருந்தாலும் ஒரு அரசின் இலக்கு மதுவிலக்கை நோக்கியே இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் வரை டாஸ்மாக் விற்பனை மதுக்கள் அனைத்தும் பனை,தென்னை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலும் உலக அளவில் சந்தைப்படுத்தப்பட வேண்டும். உணவின் ஒரு பகுதியான கள்ளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை உடனடியாக அகற்றப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையையும் இதர 13 கோரிக்கையையும் முன்நிறுத்தி சூலூர் தொகுதியில் கள்இயக்கம் சார்பில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. அவருக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் மதுக்கொள்கையினை மாற்றியமைக்கும்.

இவ்வாறு நல்லசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: