23ம் தேதிக்கு பிறகு திமுகவுடன் இணைந்து வாக்களித்து அதிமுக ஆட்சியை அகற்றுவோம்: தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி

ஆண்டிபட்டி: வாக்கு எண்ணிக்கை முடிந்து 23ம் தேதிக்கு பிறகு திமுகவுடன் இணைந்து வாக்களித்து அதிமுக ஆட்சியை அகற்றுவோம் என்று தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற பாலசமுத்திரம் வாக்குச்சாவடியை பார்வையிட வந்த தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அளித்த பேட்டி: முறையாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த பாலசமுத்திரம் கிராமத்திற்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று எந்த கட்சியும் கோரவில்லை. பிறகு எதற்காக மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது? முதல்நாள் 50 வாக்குப்பெட்டி இயந்திரங்களை கொண்டு வந்து மறுநாள் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த அறிவிப்பு வெளியாகிறது. யார் மூலமாக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை ஊடகங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் தேனியில் அதிமுகவினர் 2 ஆயிரம் பேரை வரவழைத்து அராஜகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதனால் அன்று பாதுகாப்பை அதிகரித்து அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். மே 23ம் தேதிக்குப் பிறகு திமுகவுடன் இணைந்து வாக்களித்து இந்த ஆட்சியை அகற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: