₹3.59 லட்சம் கையாடல் செய்த ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்: அறநிலையத்துறை நடவடிக்கை

ஓசூர்: சந்திரசூடேஸ்வரர் கோயிலில் ₹3.59 லட்சம் கையாடல் செய்த விவகாரத்தில், கோயில் செயல் அலுவலர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் செயல் அலுவலராக இருந்தவர் ராஜரத்தினம். இவர் கடந்த 2016ல், ஓசூர் அருகே உள்ள சென்னத்தூர் வேணுகோபால சுவாமி கோயில் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2016 கோயிலுக்கு நிரந்தர வைப்பு தொகையாக, ₹3,59,803 வழங்கப்பட்டது. இந்த பணத்தை ராஜரத்தினம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

இதையறிந்த சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், தர்மபுரி உதவி ஆணையர் நித்யா, வேணுகோபால சுவாமி கோயிலின் தற்போதைய செயல் அலுவலர் ரகுவர ராஜ்குமார் ஆகியோர், போலீசில் புகார் அளித்தனர். ஆனால்,  அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.  தொடர்ந்து, சேலம் அல்லிக்குட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (45), சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு, கோயில் செயல் அலுவலராக இருந்த ராஜரத்தினத்தை விசாரணைக்கு அழைத்தனர். பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories: