ஐடி நிறுவனத்தில் வேலை என்று டூரிஸ்ட் விசாவில் மலேசியாவிற்கு அனுப்பிய ஏஜென்சி உரிமையாளர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: ஐடி நிறுவனத்தில் வேலை என்ற இன்ஜினியரை டூரிஸ்ட் விசா மூலம் மலேவியாவிற்கு வேலைக்கு அனுப்பிய தனியார் ஏஜென்சி உரிமையாளரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முகப்பேர் கோல்டன் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் தர்மா(29) என்பவர் அளித்த புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், இன்ஜினியரான நான், வெளிநாடு செல்ல முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது மேன் பவர் ஏஜென்சி நடத்தி வரும் ரவிக்குமார் என்பவர் அறிமுகமானார். அவர் எனக்கு மலேசியாவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.

அதற்காக அவர் என்னிடம் ரூ.1.80 லட்சம் பணத்தை கேட்டார். நானும் அவர் கேட்ட பணத்தை கொடுத்தேன். பிறகு ரவிக்குமார் எனக்கு மலேசியாவிற்கு செல்ல விசா ஒன்று அளித்தார். அதன்படி நான் மலேசியாவிற்கு சென்றேன். அங்கு சென்ற பிறகு தான் நான் வந்தது  டூரிஸ்ட் விசாவில் என்று தெரியவந்தது. பின்னர் வேறு வழியின்றி மலேசியாவில் வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்போது மலேசியா போலீசார் டூரிஸ்ட் விசாவில் வேலை பார்ப்பதாக என்னை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். பின்னர் 40 நாட்களுக்கு பிறகு நான் வெளியே வந்தேன்.

எனவே என்னிடம் ரூ.1.80 லட்சம் பணத்தை பெற்று டூரிஸ்ட் விசா மூலம் மலேசியாவிற்கு அனுப்பிய ரவிக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மேன் பவர் ஏஜென்சி நடத்தி வரும் ரவிக்குமார், ராஜேஷ் தர்மாவை டூரிஸ்ட் விசா மூலம் மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவிக்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related Stories: