×

ஜோ ரூட் 84, மோர்கன் 76 ரன் விளாசல் இங்கிலாந்து 351 ரன் குவிப்பு: பாகிஸ்தான் திணறல்

லீட்ஸ்: பாகிஸ்தான் அணியுடனான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ரன் குவித்தது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசி போட்டி ஹெடிங்லி மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ஜேம்ஸ் வின்ஸ், ஜானி பேர்ஸ்டோ முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். வின்ஸ் 33 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஜோ ரூட் அதிரடியாக விளையாட, இங்கிலாந்து ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பேர்ஸ்டோ 32 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ஜோ ரூட் - கேப்டன் மோர்கன் இணை 3வது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 117 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். மோர்கன் 76 ரன் (64 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஷாகீன் ஷா அப்ரிடி பந்துவீச்சில் அபித் அலி வசம் பிடிபட்டார். ஜோ ரூட் 84 ரன் (73 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பட்லர் 34, பென் ஸ்டோக்ஸ் 21, மொயீன் அலி (0), வோக்ஸ் 13, டேவிட் வில்லி 14 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.

கடைசி கட்டத்தில் டாம் கரன் தன் பங்குக்கு 2 பவுண்டரி, 2 சிக்சர் பறக்கவிட்டார். இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ரன் குவித்தது. டாம் கரன் 29 ரன் (15 பந்து), ரஷித் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிடி 4, இமத் வாசிம் 3, ஹசன் அலி, முகமது ஹஸ்னைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 3 ஓவரில் 6 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. கிறிஸ் வோக்ஸ் வேகத்தில் பகார் ஸமான் (0), அபித் அலி (5), முகமது ஹபீஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.


Tags : Joe Root ,Morgan 76 Runs Walsh ,England ,Pakistan , Joe Root, Morgan, Walsall, England 351, Pakistan. Shortness
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது