சந்திரபாபு நாயுடு முயற்சிக்கு பலன் ராகுல், சோனியாவுடன் மாயாவதி இன்று சந்திப்பு: சூடுபிடிக்கிறது டெல்லி அரசியல்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐ.மு. கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்தித்து பேசுகிறார். இதற்கு ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடுவின் முயற்சியே காரணம் என கூறப்படுகிறது. இந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.வை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டும் முயற்சிகள் தேர்தலுக்கு முன்பே நடந்தன. ஆனால் அது எதிர்பார்த்த பலனை தரவில்லை. உ.பி.யில் எதிரிகளாக இருந்த சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து, அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்காமல் புறக்கணித்தன.

இதனால் வேறு வழியின்றி உ.பி.யில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. ஆனால் ராகுலின் அமேதி மற்றும் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் மட்டும் இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அங்கு இந்த கூட்டணியின் ஆதரவு, காங்கிரஸ் கட்சிக்கு என தெரிவிக்கப்பட்டது. ஆனால் உ.பி.யில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மாயாவதி கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிந்து 23ம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பா.ஜ.வுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இவர் உ.பி தலைநகர் லக்னோ சென்று மாயாவதி, அகிலேஷ் யாதவை சந்தித்து பாஜ.வுக்கு எதிரான அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல், ஐ.மு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, மாயாவதி இன்று சந்தித்து பேசுகிறார். இதற்கு முன் இந்த 3 பேரும், கடந்தாண்டு நடந்த கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் ஒன்றாக காணப்பட்டனர். அப்போது சோனியாவும், மாயாவதியும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரித்து பேசிக் கொண்டனர். இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடு என கூறப்படுகிறது.

Related Stories: