வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 34 இளைஞர்களிடம் ₹1 கோடி மோசடி கோவை பெண் உள்பட 2 பேர் கைது

சேலம்: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக 34 இளைஞர்களிடம் ₹1 கோடி மோசடி செய்த கோவை பெண் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன் சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து, கமிஷனர் சங்கரிடம் ஒரு புகார் கொடுத்தனர். அதில், தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சேலத்தில் அலுவலகம் நடத்தி வரும் பெண் உள்ளிட்ட இருவர் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டதாக கூறியிருந்தனர். இந்த புகார் குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.

அதில், கோவையை சேர்ந்த உமாராணி, அவரது அக்கா மகன் கார்த்தி ஆகியோர் சேலம் 5 ரோடு அருகே வெளிநாட்டு வேலைக்கான கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவை சேர்ந்த பல இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. நாமக்கல் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த துளசிராமன் (21) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். அவருடன் சேர்த்து 34 இளைஞர்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து நேற்று, உமாராணி (45), கார்த்தி (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 34 இளைஞர்களிடம் இருந்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி  ₹1 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. ஒவ்வொருவரிடமும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, துபாய், சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ₹1 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை கடந்த 2016ல் இருந்து 2019 வரை வசூலித்துள்ளனர். தொடர்ந்து உமாராணி, கார்த்தி ஆகிய இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: