மணலி புதுநகரில் புதிதாக கட்டப்பட்ட கால்வாய் சில மாதங்களிலேயே உடைந்தது: தரமற்ற பணியே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் புதிதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் தரமற்ற பணியால், சில மாதங்களிலேயே உடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்திற்கு உட்பட்ட மணலி புதுநகரில் உள்ள ஜெனிபர் நகர் பிரதான சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக, மாநகராட்சி சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில், கடந்த சில மாதங்களுக்கு முன், மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. ஆனால், தரமற்ற பணி காரணமாக சில மாதங்களிலேயே கால்வாய் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. குறிப்பாக, சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சிறு பாலம் உடைந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியே செல்பவர்கள் இந்த கம்பியில் சிக்கி கீழே விழுந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த சாலையில் மழைநீர் கால்வாய் மற்றும் சிறு பாலம் கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே சிதிலமடைந்துள்ளது. இதை சரிசெய்ய புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற தரமில்லாமல் மழைநீர் கால்வாயை கட்டி மக்கள் வரிப் பணத்தை வீணாக்கிய சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும், இதை முறையாக மேற்பார்வை செய்யாத மழைநீர் கால்வாய் பிரிவு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் தெருவிளக்கு வசதியும் இல்லாததால், இரவு நேரங்களில் இவ்வழியே செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் பெரிய அளவில் விபத்தில் சிக்கும் முன், உடைந்த மழைநீர் கால்வாயை விரைந்து சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: