அந்நிய முதலீட்டாளர்கள் ₹6,399 கோடி வாபஸ்

புதுடெல்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதம் இதுவரை இந்திய பங்குச்சந்தையில் இருந்து ₹6,399 கோடியை வெளியேற்றியுள்ளனர். அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இருப்பினும், தேர்தல் நெருங்க நெருங்க, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை பெரும்பாலும் விலக்கிக் கொண்டுள்ளனர். நடப்பு மாதத்தில் கடந்த 2ம் தேதி முதல் 17ம் தேதி வரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், பங்கு முதலீடுகளில் இருந்து 4,786.38 கோடியும், கடன் சந்தையில் இருந்து ₹1,612.62 கோடியும் வெளியேற்றியுள்ளனர். இதன்படி நிகர வெளியேற்றம் ₹6,399 கோடியாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்த நிலை மற்றும் தேர்தல் முடிவு பற்றிய தெளிவற்ற நிலை போன்ற காரணங்களால் குழப்பம் அடைந்த முதலீட்டாளர்கள், முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளனர் என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். மாறாக, இந்திய பங்குச்சந்தையில் கடந்த, பிப்ரவரி மாதத்தில் ₹11,182 கோடி, மார்ச் மாதத்தில் ₹45,981 கோடி, ஏப்ரல் மாதத்தில் ₹16,093 கோடியை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

Related Stories: