ஓராண்டாக விசாரணைக்கு வராத கிரண்பேடி வழக்கு தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பரபரப்பு கடிதம்: கவர்னர் விதிகளை மீறுவதாக புகார்

புதுச்சேரி: புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முருகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு, மத்திய அரசு கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என்று பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதியாக நான் அடிக்கடி புதுச்சேரிக்கு செல்லும்போது ராஜ்நிவாசில் தங்க நேருவதால், இந்த வழக்கை நான் விசாரித்தால் சரியாக இருக்காது என்றுகூறி வழக்கை நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வுக்கு மாற்றினார். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதன்பிறகு இந்த வழக்கு இன்னமும் விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில் தற்போதைய தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமாணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்த்த மூத்த தலைவர் முருகன் அவசர கடிதம் எழுதியுள்ளார் அந்த கடிதத்தில், `புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒரு ஆண்டுக்கு மேலாக விசாரணைக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், `புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்டு வருகிறார். மக்களவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அரசின் பணத்தில் கவர்னர் பிரசாரம் செய்கிறார். இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல். எனவே கவர்னர், தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: