ராகுல், சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு 2ம் கட்டமாக பேச்சு

புதுடெல்லி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் நேற்று இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் சிறப்பு நிதி வழங்கப்படாததால், தே.ஜ கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இந்த தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டார். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

இந்நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் முடிந்து இன்னும் 3 நாளில் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. பா.ஜ.வை பழிவாங்க துடிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் முகாமிட்டு தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி.ராஜா ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பா.ஜ.வுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்பின் உ.பி. தலைநகர் லக்னோ சென்ற சந்திரபாபு நாயுடு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியேரை சந்தித்து, பா.ஜ மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் நடந்த விவரங்களை தெரிவிப்பதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை, சந்திரபாபு நாயுடு நேற்று மீண்டும் சந்தித்து பேசினார்.

Related Stories: