வடசென்னை பகுதியில் தொடரும் அவலம் கழிவுநீர் கலந்த குடிநீரால் மக்கள் தவிப்பு: தனியார் லாரிகளில் 100 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் அவலம்

பெரம்பூர்: வடசென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வரும் நிலையில், பொது குழாய்களில் வழங்கப்படும் குறைந்தளவு குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருவதால், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தனியார் லாரிகளில் ₹100 கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் முற்றிலும் வறண்டுள்ளன. இதனால், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல் குவாரி, சிறிய ஏரிகள் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, சுத்திகரித்து சென்னை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆனாலும், மக்களுக்கு போதிய குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோடை காலம் தொடங்கியதில் இருந்து மக்கள் காலி குடங்களுடன் குடிநீர் தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக, வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் மற்றும் துறைமுகம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

பொது குழாய்களில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால், மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பல இடங்களில் பைப்லைன் உடைப்பு காரணமாக குறைந்தளவு வழங்கப்படும் குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதியில் குடிநீருடன் கழிவுநீர்  கலந்து வருகிறது. ஆனாலும், மக்கள் வேறுவழியின்றி அந்த தண்ணீரை பிடித்து துணி துவைக்கவும், குளிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். இதனால், பலருக்கு சரும நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், வியாசர்பாடி பி.வி காலனி, ஓட்டேரி அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘வடசென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக  கடந்த வாரத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட சாலை மறியல் நடத்தப்பட்டுள்ளது. லாரி தண்ணீருக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபற்றி பாமர மக்களுக்கு தெரியாததால், தண்ணீர் பெற முடிவதில்லை. இதனால், ஒரு குடம் தண்ணீருக்காக குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் வரை சென்று அலைய வேண்டி உள்ளது.

பெரம்பூர் பகுதியில் 300 வீடுகள் மற்றும் 400 வீடுகள் கொண்ட பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு, பல ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதிகப்படியான நீரை உறிஞ்சுவதால், சுற்றுப் பகுதி வீடுகளின் போர்வெல்களில் 300 அடி முதல் 400 அடி வரை போர் போட்டாலும் தண்ணீர் வருவதில்லை. இதனால், வீட்டு உபயோகத்திற்கு கூட தண்ணீர் இல்லை. தினசரி தேவைக்கு தனியார் லாரிகளில் 100 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதே நிலை நீடித்தால் வடசென்னை மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு, புறநகர் நோக்கி செல்லும் சூழல் உள்ளது,’’ என்றனர்.

வெற்று வாக்குறுதி

வடசென்னையில் உள்ள பொது குழாய்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது நீண்ட கால பிரச்னையாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு அடியில் புதைத்த பைப்லைன்கள் தற்போது ஆங்காங்கே உடைந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் குடிநீருக்காக நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் கூட காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் நிலை உள்ளது. எந்த தேர்தல் வந்தாலும் இங்கு ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்கள், முதல் வாக்குறுதியாக குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துவோம் என்று கூறுகின்றனர். ஆனால், இன்று வரை அந்த பிரச்னை தீர்க்கப்படவில்லை.

Related Stories: