கட்டிட உரிமையாளர்களுக்கு பதிலாக கடைகளுக்கு சொந்த செலவில் கான்கிரீட் கூரை அமைக்க வலியுறுத்தல்: டாஸ்மாக் ஊழியர்களை நிர்வாகம் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களே அந்த கடைகளின் மேற்கூரையை கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதை அரசு தடுத்து நிறுத்துவதுடன் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திருச்செல்வன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் பெரும்பாலும் தனியார் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடங்கள் அனைத்தும் வணிக கட்டிடங்களாக இல்லாமல் குடியிருப்பு கட்டிடங்களாக உள்ளாட்சி அமைப்பில் பதிவு செய்யப்பட்டு வீட்டு வரியும் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உள்ளாட்சி அமைப்புகளில் வணிக கட்டிட அனுமதி பெறாத கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் கட்டிட உரிமையாளர்களிடம் கட்டிட அனுமதி பெற டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபடவில்லை. அதில் பணியாற்றும் ஊழியர்களே அனுமதி வாங்க வேண்டும் என்று வற்புறுத்தியது. அதனால் 1000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளாட்சி அமைப்பின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் கல்நார் கூரைகள், தகடுகள்  வேயப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடைகள் அமைக்கும் போது, வாடகை ஒப்பந்தம் போடப்படுகிறது. அதில் கட்டிட வரைபடம், வணிக கட்டிட அனுமதி உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்கின்றனர். அதற்கு பிறகுதான் மாவட்ட ஆட்சியர்கள் ஒப்புதல் அளிக்கிறார். ஆய்வின்போது கடைகளின் மேற்கூரை கல்நார் மற்றும் தகடுகள் வேயப்பட்டு  இருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆனால் இப்போது கடைகளின் கூரையை கான்கிரீட் தளங்களாக மாற்ற வேண்டும் என்றும் ஊழியர்களை வற்புறுத்துகின்றனர். இது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயலாக தோன்றுகிறது. கட்டிடத்தின் வாடகை பெறும் கட்டிட உரிமையாளரை பொறுப்பேற்க வைக்காமல், ஊழியர்கள் செலவில் கான்கிரீட் கூரை அமைக்க  வேண்டும் என்று அதிகாரிகள் மிரட்டுகின்றனர். இதை டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் கண்டிக்கிறோம். கான்கிரீட் தளம்  அமைக்க டாஸ்மாக் ஊழியர்களை வற்புறுத்துவதை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதிகாரத்தை  தவறாக பயன்படுத்தும் டாஸ்மாக் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: