17-வது மக்களவை இறுதிக்கட்ட தேர்தல்: முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு

லக்னோ: நாட்டின் 17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதியுடன் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், உத்தரபிரதேசம் மற்றும்  பஞ்சாப் மாநிலங்களில் தலா 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் ஒன்பது தொகுதிகளிலும், பீஹார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா எட்டு தொகுதிகளிலும், ஹிமாச்சல பிரதேசத்தில் நான்கு தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் மூன்று  தொகுதிகளிலும், சண்டிகரில் ஒரு தொகுதிகளிலும் 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்றி  வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், அம்மாநிலத்தின் கோரக்பூர் நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி ஒன்றில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர்கள்  அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்து வருவதாகவும், வாக்குப்பதிவு ஜனநாயகத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் கூறினார். உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 74 தொகுதிகளிலும்,  நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் யோகி ஆதித்யாநாத் நம்பிக்கை தெரிவித்தார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தலைநகர் பாட்னாவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்கப்பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 கட்டங்களாக நடைபெற்று வரும்  நாடாளுமன்றத் தேர்தல் மிக நீண்டதாக உள்ளதாகக் குறிப்பிட்டார். ஒவ்வொரு கட்டங்களுக்கும் இடையே மிக நீண்ட இடைவெளி இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவித்த நிதிஷ் குமார், இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின்  தலைவர்களுக்கும் தாம் கடிதம் எழுத உள்ளதாகக் கூறினார். மத்திய சட்ட அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவி சங்கர் பிரசாத், பாட்னாவில் உள்ள பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை  பதிவு செய்தார். பிகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உள்ளிட்ட தலைவர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

மேற்கு வங்கத்தில் மாநில பாஜக துணைத் தலைவர் சந்திர குமார் போஸ், கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும்,  திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் பானர்ஜி, தெற்கு கொல்கத்தா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி ஒன்றில் தனது வாக்கினை பதிவு செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான  ஹர்பஜன் சிங், பஞ்சாபின் ஜலந்தர் நகருக்கு அருகில் உள்ள கார்கில் கிராமத்தில் வாக்களித்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு காலையிலேயே வந்த ஹர்பஜன் சிங், வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

Related Stories: