100 நாள் வேலைக்கு குறையும் நிதி ஒதுக்கீடு... ஒரே ஆண்டில் 82 கோடி ரூபாய் குறைப்பு

கோவை: தமிழகத்தில் 100 நாள் வேலைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து வருவதால் வேலை நாட்களின் எண்ணிக்கை குறையும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர 31 மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (100 நாள் வேலை) நடைமுறையில் உள்ளது. கடந்த 2005ம் ஆண்டில் இருந்து இந்த திட்டத்தில் மாநில அளவில், 385 தாலுகாவுக்குட்பட்ட 12,651 கிராம பஞ்சாயத்துக்களில் கடந்த 12 ஆண்டுகளில் 35 ேகாடிக்கும் அதிகமான திட்ட பணிகள் நடந்துள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த திட்டத்தில் மாநில அளவில் 13 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றினர். நடப்பாண்டில் இந்த மார்ச் வரை 1 கோடியே 16 லட்சத்து 33 ஆயிரம் பேர் தொழிலாளர்களாக பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளனர். இதில் 86.73 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தினமும் 28.27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. குளம், தடுப்பணை, வாய்க்கால், நீரோடை, நீர் பாதை, மழை நீர் தேக்கம், கசிவு நீர் குட்டை, மயானம், மைதானம் சீரமைப்பு, ரோடு, பொது வெளி சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தது.

வடகிழக்கு பருவ மழை முடிந்த பின்னர், அதிக பணிகள் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதிக்கு பிறகு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான அளவு ஒதுக்கவில்லை. ஏன் பணம் ஒதுக்கவில்லை, தொடர்ந்து வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு எப்படி பணம் தருவது என தமிழக அரசும் கேட்கவில்லை. மத்திய அரசிடம் நிதி கோராமல் விட்டு விட்டதால், 100 நாள் வேலை திட்டத்திற்கான பணிகள் ஒதுக்கீடு படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்திற்காக தமிழகத்திற்கு 428.50 கோடி ரூபாயும், 2015ம் ஆண்டில் 383.10 கோடி ரூபாயும், 2016ம் ஆண்டில் 372.9 கோடி ரூபாயும், 2017ம் ஆண்டில் 315.50 ேகாடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டில் 233.3 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. ஒரே ஆண்டில் 82 கோடி ரூபாய் குறைப்பால், பல லட்சம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறி போய் வருகிறது. தொழிலாளர்கள் பலர், 100 நாள் வேலைக்கு பதிலாக வேறு வேலைக்கு செல்லவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் 100 நாள் வேலைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதியால் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு குறைவதால், வேலை வாய்ப்பும் குறையும் நிலையிருக்கிறது. மத்திய அரசு தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 25 சதவீதம் வரை அதிகரிக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: