ரயில்வே முன்பதிவில் மோசடி சிஏஜி ஆய்வில் அம்பலம்

மன்னார்குடி: இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் குழு, ரயில்வே வழங்கும் பல்வேறு பயணச் சலுகைகள் தொடர்பாக தணிக்கை ஒன்றை ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டக்கல் ரயில்வே கோட்டத்தில் மேற்கொண்டது. இது தென் மத்திய ரயில்வேக்கு உட்பட்ட ஒரு கோட்டம். அப்போது குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்ய வழங்கப்படும் இலவச பயண பாஸ்களை ஊழியர்கள் உபயோகித்த விவரங்களையும் சேர்த்து ஆய்வு செய்தது. ரயில்வே ஊழியர்கள் பணியில் சேர்ந்த முதல் 5 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு ஒன்று, பிறகு ஆண்டுக்கு மூன்று, ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு இரண்டு என்ற அளவில் பயண பாஸ் வழங்கப்படுகிறது. தர ஊதியம் ரூ.4 ஆயிரத்து 200 மற்றும் அதற்கு மேல் பெற்றால் முதல் வகுப்பு பாஸ், அதற்கு குறைவான தர ஊதியத்திற்கு இரண்டம் வகுப்பு பாஸ் என ரயில்வே நிர்னயித்து இருக்கிறது. முதல் வகுப்பு பாஸ் வைத்து இருப்பவர்கள், உதவியாளர் ஒருவரை இரண்டாம் வகுப்பு பெட்டியில் அழைத்து செல்லவும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ரயில்வேயில் எந்த இரண்டு ஊர்களுக்கு இடையேயும் பாஸ் பெற்றுக் கொள்ளவும், இலவச பாசில் முன்பதிவு செய்யவும் அனுமதி உண்டு.

Advertising
Advertising

ஒருமுறை முன்பதிவு செய்து பயணம் செய்து விட்டால் பாஸ் செல்லாது என்பது விதி. பயணம் செய்ததை மறைத்து விட்டு ஒரு இலவச பாசில் 10 முதல் 20 தடவை வரை முன்பதிவு செய்து பயணம் செய்து இருப்பதும், முதல் வகுப்பு பாசில் உதவியாளருக்கான அனுமதியில் வெளி நபர்களை அழைத்து சென்று இருப்பதும் சிஏஜி ஆய்வில் அம்பலமாகி இருக்கிறது. இந்த மோசடியில் 58 ரிசர்வேஷன் கிளர்க்குகள் சிக்கி உள்ளனர். இதனையடுத்து குண்டக்கல் கோட்ட வணிக மேலாளர் மோசடியில் ஈடுபட்ட ஊழியர்களிடம் விளக்கம் தர 10 நாட்கள் காலக்கெடு கொடுத்து கடந்த மே 7ம் தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? இது போன்ற மோசடிகள் அதிக எண்ணிக்கையில் நடந்து வருகிறதா? என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரனிடம் கேட்ட போது அவர் கூறியது, ரயில்வே விஜிலென்ஸ் துறை இதற்கான சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற தில்லுமுல்லுகள் எங்கேயாவது ஒரு இடத்தில் நடக்கிறது. அதிக அளவிலான மோசடிகளுக்கு வாய்ப்பு இல்லை. கிளர்க்குகள் முன்பதிவு பாஸ் மீது வ. எண், தேதி மற்றும் பிஎன்ஆர் எழுதி கையெழுத்திட வேண்டும். இது போன்ற மோசடி செயல்களில் ஈடுபடும் ஊழியர்களிடம் முதலில் துறை ரீதியான விளக்கம் கேட்கப்படும். பதில் திருப்தி அளிக்காத பட்சத்தில் ரயில்வேத் துறை அவர்களை பணி நீக்கம் செய்து விடும். மேலும் மோசடி பயணங்களுக்கான கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர்களின் ஒய்வூதிய பணிக்கொடையில் வசூலித்து விடும் என்றார்.

Related Stories: