தொடரை வென்றது இங்கிலாந்து ஜேசன் ராய் அதிரடி சதம்: பாகிஸ்தான் ஏமாற்றம்

நாட்டிங்காம்: பாகிஸ்தான் அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற இங்கிலாந்து அணி 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ரன் குவித்தது. பகார் ஸமான் 57 ரன், ஹபீஸ் 59 ரன், பாபர் ஆஸம் 115 ரன், சோயிப் மாலிக் 41, கேப்டன் சர்பராஸ் அகமது 21 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் டாம் கரன் 4, மார்க் வுட் 2, ஜோப்ரா ஆர்ச்சர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் - ஜேம்ஸ் வின்ஸ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். வின்ஸ் 43 ரன் (39 பந்து, 6 பவுண்டரி) விளாசி அவுட்டானார். அடுத்து ஜேசன் ராய் - ஜோ ரூட் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ராய் 114 ரன் (89 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி முகமது ஹஸ்னைன் பந்துவீச்சில் சர்பராஸ் வசம் பிடிபட்டார். ஜோ ரூட் 36 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர், மொயீன் அலி இருவரும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

27.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்திருந்த இங்கிலாந்து, 30.2 ஓவரில் 216 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும், பென் ஸ்டோக்ஸ் உறுதியுடன் போராட, ஆட்டம் பரபரப்பானது. டென்லி 17 ரன், டாம் கரன் 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஸ்டோக்ஸ் 71 ரன் (64 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), அடில் ரஷித் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் இமத் வாசிம், முகமது ஹஸ்னைன் தலா 2, ஜுனைத் கான், ஹசன் அலி, சோயிப் மாலிக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஜேசன் ராய் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து அணி 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது (முதல் போட்டி மழையால் ரத்து). 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

Related Stories: