முத்தரப்பு தொடரில் வங்கதேசம் சாம்பியன்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி சாதனை

டப்ளின்: அயர்லாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில், வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அயர்லாந்தில் நடைபெற்ற இத்தொடரில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் மோதின. லீக் சுற்றின் முடிவில் வங்கதேசம் (14 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (9 புள்ளி) அணிகள் பைனலுக்கு முன்னேறிய நிலையில், அயர்லாந்து (2 புள்ளி) கடைசி இடம் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று முன்தினம் மோதின. டப்ளின் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் 20.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 131 ரன் எடுத்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

Advertising
Advertising

நீண்ட தாமதத்துக்குப் பின்னர் ஆட்டம் தொடங்கிய நிலையில், தலா 24 ஓவர் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். ஷாய் ஹோப் 74 ரன் (64 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி மிராஸ் பந்துவீச்சில் மொசாடெக் வசம் பிடிபட்டார். வெஸ்ட் இண்டீஸ் 24 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன் குவித்தது. சுனில் அம்ப்ரிஸ் 69 ரன் (78 பந்து, 7 பவுண்டரி), டேரன் பிராவோ 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, டக்வொர்த்/லூயிஸ் விதிப்படி வங்கதேசம் 24 ஓவரில் 210 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தமிம் இக்பால் 18, சப்பிர் ரகுமான் (0) ஏமாற்றமளித்த நிலையில், சிறப்பாக விளையாடிய சவும்யா சர்க்கார் 66 ரன் (41 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.

ரன் வேகத்தை உயர்த்தும் முயற்சியில் முஷ்பிகுர் ரகிம் 36 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), முகமது மிதும் 17 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். எனினும், கடைசி கட்டத்தில் அதிரடியாக சிக்சர்களைப் பறக்கவிட்ட மொசாடெக் உசேன் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தவிடு பொடியாக்கினார். வங்கதேசம் 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து அபாரமாக வென்றது. மகமதுல்லா 19 ரன், மொசாடெக் உசேன் 52 ரன்னுடன் (24 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொசாடெக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். வங்கதேச அணி முதல் முறையாக 2க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் தொடரின் பைனலில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. உலக கோப்பைக்கு தொடருக்கு முன்பாக கிடைத்துள்ள இந்த சிறப்பான வெற்றியால் வங்கதேச வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: