வர்த்தக உறவு பாதிப்பதால் கவலை இரும்பு, அலுமினியம் மீதான இறக்குமதி வரி உயர்வு ரத்து: கனடா, மெக்சிகோவுக்கு டிரம்ப் சலுகை

வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ நாடுகள் உடனான வர்த்தக உறவு கடுமையாக பாதிக்கப்படுவதால் கவலை அடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் மீதான வரி ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளிடையே கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக வட அமெரிக்க நாடுகளின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்’ இருந்து வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இரும்பு, அலுமினியம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் தனது நாட்டில் உள்ள இரும்பு, அலுமினிய தொழிற்சாலைகளுக்கும், பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கருதினார். இதனால், இப்பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக இரும்பு மீது 25 சதவீதமும், அலுமினியம் மீது 10 சதவீதமும் கூடுதலாக இறக்குமதி வரி விதித்தார்.

இந்த வரி விதிப்பில் தனது நட்பு நாடுகளான கனடா, மெக்சிகோவையும் டிரம்ப் சேர்த்தார். இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்த நாடுகளும் கடுமையான இறக்குமதி வரியை விதித்தன. இதனால், இந்த நாடுகளுடன் பல ஆண்டுகளாக அமெரிக்கா வைத்திருந்த சுமூகமான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. இது, டிரம்ப்புக்கு கவலை அளித்தது. இந்நிலையில், இந்த மூன்று நாடுகளிடையே புதிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இரு தினங்களுக்கு முன் கையெழுத்தானது.

அதன்படி, இந்நாடுகள் தங்கள் உற்பத்தி பொருட்களை எவ்வித இறக்குமதி வரியும் இன்றி விற்பனை செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. இந்த புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு, இரும்பு, அலுமினியம் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட இறக்குமதி வரி தடையாக உள்ளது. இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இப்பொருட்கள் மீதான வரி விதிப்பை ரத்து செய்வதாக டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். இதை கனடா, மெக்சிகோ அரசுகள் வரவேற்றுள்ளன. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதியை திரும்பப் பெற, இந்நாடுகளும் முடிவு செய்துள்ளன.

Related Stories: