சர்வதேச செம்மர கட்டை கடத்தல்காரர்கள் 13 பேர் கைது: 4,000 கிலோ செம்மரம் பறிமுதல்

பெங்களூரு: செம்மர கட்டைகளை பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு கடத்தி வந்த கும்பலை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து ரூ.3.5 கோடி  மதிப்புள்ள சுமார் 4 ஆயிரம் கிலோ மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூரு விநாயகநகரில் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு கார்கோ சேமிப்பு கிடங்கு அருகில் செம்மர கட்டை ஏற்றி செல்லும் வாகனம் இருப்பதாக சிசிபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நள்ளிரவில் நடத்திய சோதனையில் பாஷா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், டாடாஏஸ் வாகனத்தில் 500 கிலோ மதிப்புள்ள 14 செம்மர கட்டைகள் 7  பாக்ஸ்களில் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பாஷாவிடம்  நடத்திய விசாரணையில் நாகமங்கலாவில் உள்ள குடோன் ஒன்றில் செம்மர கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. நேற்று காலை அங்கு சென்ற  போலீசார் 35 கிலோ எடை கொண்ட 100க்கும் மேற்பட்ட செம்மர கட்டைகளை பறிமுதல்  செய்தனர். அதன் எடை 3,500 கிலோ என்றும் அதன் மார்க்கெட் விலை ரூ.3.50 கோடி  என்று போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து பெங்களூரு கமிஷனர் சுனில்குமார் கூறியதாவது: இந்த செம்மர கடத்தல் வழக்கில் அப்துல்  ரஷித் (48), ஜுபேர்கான் (33), சலீம் (50), தாஷீர்கான் (25), எம்.எஸ்.பாஷா  (40), ஷபி (30), முன்னா (27), நவுஷத் (27), சித்திக் (40), இம்ரான் (28), அன்னு (23), முபராக் (26) மற்றும் அலிகான் (40) ஆகிய 13 பேரை போலீசார் கைது  செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கர்நாடகம் மட்டுமில்லாமல் தமிழகம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் செம்மர கட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. பல  கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. விலை உயர்ந்த மரங்களை சந்தேகம் ஏற்படாத வகையில் பேக்கிங் செய்து லாரி மற்றும் பஸ்கள் மூலம் போலி பெயரில் பில் தயாரித்து சென்னை, மும்பை மாநகரில் உள்ள விமான நிலையங்கள் மூலம் ஹாங்காங், மலேசியா, வியட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர் என்றார்.

Related Stories: