மோடி, அமித் ஷாவுக்கு ஆதரவான முடிவுகளால் தேர்தல் ஆணையர் லவசா போர்க்கொடி: ‘ஆணைய கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன்’ என கடிதம்

புதுடெல்லி: பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித்ஷா மீதான தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் புகார்கள் மீது எடுக்கப்பட்ட முடிவுகளால் அதிருப்தி அடைந்துள்ள தேர்தல் ஆணையர் அசோக் லவசா, ‘இனிமேல் நடக்கும் நடத்தை விதிமுறை மீறல் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன்’ என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு, கடந்த இரு மாதங்களாக நாடு முழுவதும் பிரசாரங்கள் நடந்தன. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் பரஸ்பரம் ஏராளமான புகார்களை அளித்தன. இந்த புகார்களை குழுக்கள் அமைத்து தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுத்து வந்தது.

Advertising
Advertising

பிரதமர் மோடி, பா.ஜ தலைவர் அமித்ஷா ஆகியோரும் தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்த சில கருத்துக்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகார் செய்தன. மகாராஷ்டிராவில்  நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்கள் வாக்குகளை, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு  அர்ப்பணிக்க வேண்டும்’ என்று கூறினார். இது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் நடந்த பிரசாரத்தில் பேசிய பாஜ தலைவர் அமித் ஷா, ‘ராணுவ வீரர்கள் மோடியின் படை’ என குறிப்பிட்டார். இது குறித்தும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.

இது போன்ற புகார்களை ஆய்வு செய்யும்போது, தலைமை தேர்தல் ஆணையரும், 2 தேர்தல் ஆணையர்களும் ஒரேவிதமான முடிவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,  மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டால் பெரும்பான்மை கருத்து அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சட்டம் கூறுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மீதான புகார்களை விசாரித்த தேர்தல் ஆணையம், இருவரும் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறவில்லை என தெரிவித்தது.   ஆனால், மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிரான புகார்களில் தேர்தல் ஆணையர் அசோக் லவசா 11 முறை மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இருவரின் மீதும் நடத்தை விதிமுறை மீறல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர் கூறியது நிராகரிக்கப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையரும், மற்றொரு ஆணையரும் மோடி, அமித் ஷாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்தை பதிவு செய்ததால், பெரும்பான்மை அடிப்படையில் அவர்களின் உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அசோக் லவசா, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடந்த 4ம் தேதி ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘மைனாரிட்டி கருத்து அடிப்படையில் நான் கூறுவது பதிவு செய்யப்படுவதில்லை. இதனால், தேர்தல் ஆணையர்களின் கூட்டத்தில் நான்  பங்கேற்பது அர்த்தமற்றதாகிறது.

எனவே, இனிமேல் நடக்கும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான கூட்டங்களில் இருந்து விலகி இருக்க நான் நிர்பந்திக்கப்பட்டு உள்ளேன்’ என கூறியுள்ளார். இது தொடர்பான தகவல் ஊடகங்களில் வெளியானதால், தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு, மோதல் ஏற்பட்டு இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அசோக் லவசா தெரிவித்துள்ள அதிருப்தி, தேர்தல் ஆணையத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரும்பத் தகாத சம்பவம் தலைமை ஆணையர் வருத்தம்:

தேர்தல் ஆணையர் அசோக் லவசா விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் இருந்து விலகி இருக்க, தேர்தல் ஆணையர் அசோக் லவசா முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் விரும்பத்தகாதது, தவிர்க்க கூடியது. மக்களவை தேர்தலை நடத்துவதில் எழும் பிரச்னைகளை ஆலோசிக்க குழுக்கள் அமைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. நடத்தை விதிமுறை மீறல் புகார்களை விசாரிக்கும்போது, தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒரேவிதமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. இதற்கு முன்பும் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், தேர்தல் ஆணையத்தின் வரையறைக்கு உட்பட்டே இறுதி முடிவுகள் இருந்தன’ என கூறியுள்ளார்.

விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்:

காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவசா, பிரதமர் மோடி - அமித் ஷாவுக்கு எதிராக பலமுறை மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பும்படி லவசா கூறியும், அவருடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை. மாறாக  மோடி, அமித் ஷாவுக்கு தேர்தல் ஆணையம் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.

அரசியல் சாசன அமைப்பாக இருக்கும் தேர்தல் ஆணையம், மைனாரிட்டி கருத்தையும் பதிவு செய்ய வேண்டும். ஆனால், மோடியையும், அமித் ஷாவையும் பாதுகாப்பதற்காக அரசியல் சாசன விதிமுறைகள் நசுக்கப்பட்டுள்ளன,’ என கூறியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையர் அசோக் லவசா எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் எழுப்பியுள்ள பிரச்னையால், தேர்தல் நடைமுறையின் புனிதத்தன்மைக்கும், தேர்தல் ஆணையத்தின் ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: