தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நகை, பணம் பட்டுவாடா நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 950 கோடி பறிமுதல்: 2வது இடம்-குஜராத் 552 கோடி 3வது இடம்-டெல்லி 426 கோடி

சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. அதன்படி அனுமதி இல்லாமல் பணம், நகை எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதையும் மீறி பணம், நகைகளை எடுத்துச் சென்றதாக தமிழகத்தில் மட்டும் ₹950 கோடி சிக்கியுள்ளது. அந்த வகையில் தமிழகம் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ₹552 கோடி கைப்பற்றப்பட்டு குஜராத் 2வது இடத்திலும், ₹426 கைப்பற்றப்பட்டு டெல்லி 3வது இடத்திலும் உள்ளது. நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி அறிவித்தார். அதன்படி, நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 2வது கட்டமாக, கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. பின்னர் 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மட்டும் கடைசி கட்டமாக மே 19ம் தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

அதன்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 10ம் தேதி மாலையில் இருந்து நடைமுறையில் உள்ளது. பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கட்சி பணிகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். அரசு பணிகளில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மேலும், அனுமதி இல்லாமல் வாகனங்களில் ₹50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் செல்லக்கூடாது, தங்கம், வெள்ளி, பரிசு பொருட்கள் மற்றும் மதுபானங்கள் வாகனங்களில் போதிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அனுமதி இல்லாமல் இப்படி எடுத்துச் செல்லும் பணம் மற்றும் நகைகள் வாக்காளர்களுக்கு கொடுக்க பயன்படுத்தப்படலாம் என்பதால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்து வந்தது. தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மார்ச் 10ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார். வாகனங்களை சோதனையிடுவதற்காக பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

அதன்படி கடந்த 75 நாட்களாக தேர்தல் பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர், வருமான வரித்துறையினர் நாடு முழுவதும் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டனர். தற்போது, கடைசி கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது. அதன்படி, நேற்றுடன் இதுபோன்ற வாகன சோதனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. நாளை முதல் வாகனங்கள் சோதனை நடத்த வாய்ப்பு இல்லை. இந்த நிலையில், கடந்த மார்ச் 10ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை (17ம் தேதி) நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ள பணம், நகை, மதுபானங்கள் உள்ளிட்ட விவரங்களை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் பணம், நகை, மதுபானம், பரிசு பொருட்கள் என மொத்தமாக ₹3439.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணமாக ₹836.70 கோடி, மதுபானம் ₹291.18 கோடி, போதை பொருட்கள் ₹1267.71 கோடி, தங்கம், வெள்ளி ₹985.67 கோடி, பரிசு பொருட்கள் ₹58.13 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில்தான் பணம் மற்றும் தங்க நகை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மட்டும் பணம், நகையாக மொத்தம் ₹950.08 கோடி சிக்கியுள்ளது. 2வது இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு ₹552.62 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. 3வது இடத்தில் டெல்லி உள்ளது. அங்கு ₹426.1 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பணமாக மட்டும் கைப்பற்றியதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. ₹227.93 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியதும் அடங்கும். 2வது இடத்தில் ஆந்திராவும் (₹139.21 கோடி), 3வது இடத்தில் தெலுங்கானா (₹70.98 கோடி) சிக்கியுள்ளது. அனுமதி இல்லாமல் தங்கம் மற்றும் வெள்ளி எடுத்துச் சென்றதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ₹709.67 கோடி (3113 கிலோ) மதிப்புள்ள தங்கம், வெள்ளி சிக்கியுள்ளது. 2வது இடத்தில் உத்தரபிரதேசம் (₹71.79 கோடி), 3வது இடத்தில் மகாராஷ்டிரம் (₹71.21 கோடி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், அதிகபட்சமாக ₹950 கோடி பறிமுதல் செய்யப்பட்டாலும் சிறு வியாபரிகள், தங்க வியாபாரிகள், ஏடிஎம் இயந்திரத்துக்கு பணம் எடுத்துச் சென்றவர்களிடம் தான் தேர்தல் ஆணையம் தங்கள் கைவரிசையை காட்டியது. அடுத்து, எதிர்க்கட்சிகளை குறிவைத்தே வருமான வரி சோதனையும் நடத்தப்பட்டது. பண நடமாட்டம் அதிகம் நடந்ததாக புகார் கூறியும், ஆளுங்கட்சியான அதிமுக பிரமுகர்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: