கோடையில் குளிர்ச்சி, குளிர் காலத்தில் வெப்பம் தரும் அதிசய கூறைச்சேலை: நலிந்துவரும் தொழில் காப்பாற்றப்படுமா?

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புகழ்பெற்ற கூறைப்பட்டு சேலை பாரம்பரியமிக்கதும் வெயில்காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் வெப்பமும் தரக்கூடிய ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த கூறைப்பட்டு சேலை தொழில் நசிவடைந்து வருவதை பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூறைச்சேலை என்றாலே அது மாயூரத்து கூறைநாட்டில் உற்பத்தியாகும் கூறைப்பட்டாகும். நாட்டில் எந்த இடத்திலும் உற்பத்தியாகாத சேலை மயிலாடுதுறையில் உற்பத்தியாகி வருகிறது.  கூறைச்சேலைக்கு 1000 ஆண்டு பழமையான கதை உண்டு. காஞ்சிபுரத்தில் இருந்த சாலிய செட்டியார்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து மயிலாடுதுறைக்கு வந்தபோது அவர்களை சோழமன்னன் ஆதரித்து நெசவுத்தொழிலுக்கான இடம் வசதிபோன்றவற்றை ஏற்படுத்திக்கொடுத்திருந்தான்.  காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை நெசவு செய்த சாலியச்செட்டியார்கள் மயிலாடுதுறையில் கூறைப்புடவையை நெய்தார்கள். பட்டுச்சேலை என்பது குறிப்பிட்ட நேரம்வரை மட்டுமே பெண்களால் கட்ட இயலும். நேரம் ஆக, ஆக பட்டின் உஷ்ணம் தாங்காமல் உடல் வியர்வையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும், இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பட்டுப்புடவையை மாற்றிவிடுவார்கள்.

 
Advertising
Advertising

இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக கூறைப்பட்டு ஒன்றை சாலியச்செட்டியார்கள் நெய்து அதை அளித்துவந்தனர்.  80சதவிகிதம் அசல் பட்டும் 20 சதவிகிதம் அசல் பருத்தி நூலால் நெய்யப்படுவதுதான் கூறைச்சேலையாகும்.  இதில் மடிசார் புடவையாகக்கட்டுவதற்கு என்று பிரத்யேகமாக நீளத்தை அதிகரித்தும் தயாரித்தனர். மயிலாடுதுறை கூறைச்சேலை மடிசார் மாமிகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கியது. இன்றைக்கும் கூறைப்பட்டுச் சேலையை தேடிப்பிடித்து வாங்கிச்செல்லும் மடிசார் கட்டும் பெண்களும் உண்டு. கூறைநாடு பகுதியில் ஒரு நெசவுக்கூடம் 200 மீ தூரம்கொண்டதாக இருந்தது, அதே போன்று கூறைநாடு பகுதியில் 50க்கும்மேற்பட்ட பல்வேறு இடங்களில் கைத்தறிநெசவுத்தொழில் நடைபெற்றுவந்தது ஆயிரக்கணக்கான மக்கள் இவற்றில் வேலை பார்த்துவந்துள்ளனர்.  

சாலியச்செட்டியார்கள் தங்களது நெசவுத்தொழிலை காலப்போக்கில் குறைத்துக்கொண்டே வந்ததால் கூறைப்புடவை அழிவை நோக்கிச் சென்ற காலத்தில் கூட்டுறவு சங்கம்மூலம் அவற்றை தூக்கி நிறுத்தினர். 1965ல் தமிழக முதல்வராக இருந்த பக்தவச்சலம் மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள காக்கும்பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 26 ஆயிரம் சதுர அடியில் கூறைநாடு தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.  அதன்பிறகு கூறைப்பட்டுச்சேலை மற்றும் சாதாரணப்பட்டுச்சேலை உற்பத்தி அதிகரித்தது. கைத்தறி நெசவு என்பது ஒரு தொழிற்சாலைபோல் காலை 8 மணிக்கு சங்கு ஊதப்படும். அப்போது  நெசவு நெய்வோர் கூடத்திற்கு வந்துவிடவேண்டும்.  மதியம் ஒரு மணிநேரம் சாப்பாட்டுவேளைக்கு நேரம் ஒதுக்கப்படும். மாலை 6 மணிக்கு வேலை கலைந்து செல்வார்கள். 100க்கும்மேற்பட்டோர் இந்த கைத்தறித்தொழிற்சாலையில் வேலைசெய்துவந்தனர்.

 

மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக தொழிற்சாலை அருகிலேயே இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. உற்பத்திக்கூடம் உள்ள  இடத்தில் உற்பத்தியுடன் கூடிய விற்பனை நிலையமும் செயல்பட்டதால் மயிலாடுதுறை கூறைப்பட்டு மற்றும் பட்டுப்புடவைகளை வாங்குவதற்கு பல்வேறு இடம் மற்றும் மாவட்டங்களிலிருந்து மக்கள் குவிந்துவந்தனர்.  காலப்போக்கில் நவீன எந்திரம்மூலம் நெசவுத்தொழில் மாறியபிறகு கைத்தறிக்கான மவுசு குறைய ஆரம்பித்தது, ஆடம்பரத்திற்கு மக்கள் மாறியபோது பழமையை மறந்துவிட்டனர்.  நெசவுத்தொழில் செய்தவர்களும் தங்களது தொழிலை மாற்றிக்கொண்டதுடன் தங்களது வாரிசுகளுக்கு இந்த கைத்தறிநெசவுத்தொழில் வாடையே அடிக்காமல் பார்த்துக்கொண்டனர். இதனால் கூறைப்பட்டுத்தொழில் மெல்லமெல்ல நசிந்துகொண்டே வந்தது, ஆரம்பத்தில் இருந்த கட்டடம் பழுது பார்க்க முடியவில்லை, பழைய கால கட்டிடத்தை தவிர மற்ற இடங்கள் எல்லாம் காடுமண்டிப்போய்விட்டது.

ஒவ்வொரு கைத்தறியாக பழுதாகிக்கொண்டே வந்து 7 கைத்தறிகள் மிஞ்சியுள்ளது.   அவ்வப்பொழுது நல்ல அதிகாரிகள் வருவார்கள் கோஆப்டெக்ஸ் மூலம் இங்கிருந்து பட்டுப்புடவைகளை வாங்கி அவற்றை விற்பனைசெய்வார்கள்.  கோ ஆப்டெக்ஸ் வாங்குவதால் இந்தக் கைத்தறிக்கூடம் மட்டும் ஜீவனை விடாமல் இழுத்துக்கொண்டு உள்ளது.  கோஆப்டெக்ஸ் எங்கெங்கே கண்காட்சி நடத்தினாலும் மயிலாடுதுறை கூறைப்பட்டுச்சேலை முதலில் விற்றுத்தீர்க்கும்.  அதன்பிறகுதான் மற்ற பட்டுச்சேலைகள் விற்பனையாகும்.  மயிலாடுதுறை கைத்தறி தொழிற்கூடத்தில் உற்பத்தியாகும் கூறைப்பட்டு சேலைகள் குறைந்தபட்சம் ₹4500 விலையாக உள்ளது.

இந்தப் பட்டுச் சேலைகளை நாள்முழுவதும் கட்டினாலும் உடலுக்கு எந்த கெடுதலும் கிடையாது.  ழுமுவதும் பட்டினால் உற்பத்தியாகும் சேலைகளும் தயாரிக்கின்றனர். அந்த சேலைகளும் இங்கே விற்பனையாகிறது.  உற்பத்திவிலைக்கே விற்பனைசெய்வதால் கடைகளில் விற்கப்படும் சேலைக்கும் இங்கே விற்பனை செய்யப்படும் சேலைகளுக்கும் ஒரு சேலைக்கு ₹2 ஆயிரத்திலிருந்து ₹6 ஆயிரம்வரை விலை வித்தியாசம் இருப்பதாக கூறுகின்றனர். தமிழக அரசு மயிலாடுதுறை கூறைப்பட்டுச்சேலைக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதன் சங்கத்திற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வெளிமாநிலங்களில் வரவேற்பு

கூறைச் சேலை  கர்நாடகா, ஆந்திரா, டெல்லி மற்றும் கல்கத்தா ஆகிய மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  பொதுமக்கள் தற்பொழுது பழைய பாரம்பரிய நாகரிகம் மற்றும் உணவு உடை பழக்கத்திற்கு மாறிவரும் வேளையில் வெயில் காலத்தில் குளுமையாகவும் மழை காலத்தில் கதகதப்பாக இருக்கும் இந்த கூறைப்புடவையை வாங்கி பயன்பெறவேண்டுமாய் கூட்டுறவு சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: