இனி விறகு, டீசல், காஸ் தேவையில்லை ஏலக்காய் உலர்த்த எலக்ட்ரிக் டிரையர்: தேனி இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு

சின்னமனூர்: தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஏலக்காயை உலர்த்துவதற்கு எலக்ட்ரிக் டிரையரை கண்டுபிடித்துள்ளார். இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 2.50 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் நடந்து வருகிறது. ஏலக்காய்களை உலர்த்துவதற்கு விறகு, டீசல், காஸ் சிலிண்டர் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதில் விறகுதான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கேரளாவில் ஆண்டிற்கு ஒன்றரை லட்சம் டன் மரங்கள் வெட்டி எரிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்து 70 ஆயிரம் டன் அளவு கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக ஏலக்காய் உலர்த்த மின்சாதனத்தை தேனி மாவட்ட இளைஞர் கண்டுபிடித்துள்ளார். தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (30). விலங்கியல் பட்டதாரி. எலெக்ட்ரானிக் டெக்னாலஜி மீது ஆர்வம் கொண்டவர். இவர் ஏலக்காயை உலர்த்துவதற்கு மின்சாதனம் கண்டுபிடிக்க விரும்பினார். இதற்காக கேரள மாநிலம், பாம்பாடும்பாறையில் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். அங்குள்ள ஏலத்தோட்ட உரிமையாளர்கள் சுரேஷ், சுரேந்திரன் ஆகியோரின் உதவியோடு ஏலக்காய் உலர்த்தும் மின்சாதனம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். சுமார் 10 ஆண்டுகள் அயராத உழைப்பின் காரணமாக தற்போது ஏலக்காய் உலர்த்தும் எலெக்ட்ரிக் டிரையரை கண்டுபிடித்துள்ளார். இதற்கான அறிமுக விழா கேரள மாநிலம், நெடுங்கண்டத்தில் நடைபெற்றது. ஸ்பைஸஸ் போர்டு செயலாளர் சத்தியன், கோவை பிஎஸ்ஜி கல்லூரி இயக்குனர் சுரேஷ், சென்னை ஐஐடி பேராசிரியர் இந்துமதி, ஸ்பைஸஸ் போர்டு விஞ்ஞானிகள் ரமா, முருகன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதன்மை செயல் அலுவலர் ஞானசம்பந்தம் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

உதயகுமார் கூறுகையில், ‘‘பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளேன். வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது. ஏல விவசாயிகளின் நலனுக்காக இந்திய அரசிடம் இந்த இயந்திரத்திற்கு மானியமும் கடன் வசதியும் அளிக்க கோரிக்கை வைத்துள்ளேன். ஏலக்காய் தவிர்த்து காய்கறிகள், பழங்கள், மூலிகைகளையும் உலர்த்தும் வகையில் டிரையர்களையும் அறிமுகப்படுத்த உள்ளேன்’’ என்றார். ஏலக்காயை உலர்த்த மின்சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது உலகளவில் இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.

உலக அளவில் அங்கீகாரம்

ஏலக்காய் உலர்த்தும் இயந்திரத்தை தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் அங்கீகரித்துள்ளது. இவரது ஆராய்ச்சிக்காக ₹7.60 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது. இது தவிர இந்திய ஸ்பைஸஸ் வாரியம் ஆய்வு செய்து, இந்த டிரையர் அதிகளவு எண்ணெய் சத்தை கொடுக்கிறது என்ற சான்றும் வழங்கியுள்ளது. நாகலாந்து, அசாம் மாநில பல்கலைகள், மும்பை, சென்னை ஐ.ஐ.டி நிறுவனங்கள், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, கேரள நறுமண பொருள் கூட்டமைப்பு, கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாறுபாட்டு அமைப்பு (டென்மார்க்) ஆகியவை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளன.

செலவு ரொம்ப ‘கம்மி’

இந்த டிரையரில் பல்வேறு சிறப்புகள் உள்ளன. டீசலில் இயங்கும் டிரையரில் ஒரு கிலோ ஏலக்காயை உலர்த்துவதற்கு ₹8 வரை செலவாகும். இந்த எலெக்ட்ரிக் டிரையரில் ₹2 மட்டும் செலவாகிறது. 1,200 கிலோ ஏலக்காய் வரை உலர்த்தலாம்.

Related Stories: