மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய மதச்சார்பற்ற ஜனதா தளம் முழு ஆதரவு கொடுக்கும்: முதல்வர் குமாரசாமி உறுதி

பெங்களூரு: மக்களவை தேர்தல் முடிவு வெளியாகிய பின் மத்தியில் காங்கிரஸ்  தலைமையில் அமையும் கூட்டணி அரசுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் முழு ஆதரவு தரும் என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி கூறியுள்ளார்.

முன்னாள்  பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடன்  திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்பியபின் செய்தியாளர்களிடம்  கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் மக்களவைக்கு இரு கட்டமாக நடந்த  தேர்தலில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் மஜத  - காங்கிரஸ் கூட்டணி 18 முதல் 20  தொகுதிகளில் வெற்றி பெறும்.

மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் முடிவு செய்தபோது, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதுடன் மத்தியில் காங்கிரசுக்கு முழு ஆதரவு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் மக்களவை தேர்தல் முடிவு எப்படி அமைந்தாலும் காங்கிரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் சரி, ஆட்சி அமைக்க முடியாமல் எதிர்க்கட்சியில் அமரும் சூழ்நிலை வந்தாலும் காங்கிரசுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுப்போம்.  இதில் எந்த மாற்றமும் கிடையாது. மத்தியில் யார் பிரதமராக வருவார் என்பதை இப்போது உறுதி செய்ய முடியாது. மஜதவின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே  என்றார். பேட்டியின் போது உடனிருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் இதை  உறுதி செய்தார்.

Related Stories: