காத்திருப்போர் அறை இல்லை, குடிதண்ணீர் இல்லை, கழிவறை சுத்தம் இல்லை அலட்சியத்தின் உச்சத்தில் அரசு மருத்துவமனைகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தவிக்கும் நோயாளிகள்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படாமல், பல்வேறு விதமான வசதி குறைபாடுகள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லாத பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் தான், அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அப்படி இருக்கையில் தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது, அரசு அதிக வசதி செய்துதரப்பட வேண்டும். ஆனால் உண்மையில் அரசு மருத்துமவனைகளில் நோயாளிகள் முறையாக கவனிக்கப்படுவதில்லை. அதே போல் மருத்துமவனை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவது இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துமவனைக்கு வரும் புறநோயாளிகள் பிரிவுக்கு காலையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பல மணி நேரம் காக்க வைக்கப்படுகின்றனர். அவர்களின் உடல் நலம் மிக மோசமாக இருந்தாலும், ஸ்டெச்சரில் படுக்க வைக்கப்பட்டு பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் உள்நோயாளிகள் உடன் தங்கும் நபருக்கு அந்தந்த கட்டிடங்களிலேயே காத்திருக்கும் அறை அமைக்க வேண்டும். காத்திருப்போர் அறை அருகாமையில் அமைக்கப்படாததால், மருத்துவமனையின் வளாகத்திலேயே நோயாளியுடன் தங்குபவர்கள் படுத்து உறங்கும் நிலை உள்ளது.  அதே போல், மருத்துவமனையின் டிஸ்பென்சரியில் மாத்திரை பெறுவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அதேபோல், எழும்பூர் மகப்பேறு, மகளிர் மருத்துவமனையிலும் போதுமான எண்ணிக்கையில் காத்திருப்போர் அறைகள் திறக்கப்படவில்லை. தினசரி வரும் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கைக்கு ஏற்ப, காத்திருப்போர் அறை அமைக்கப்பட வேண்டும். உடல்நலக்குறைவால் அவதிப்படும் தாய்மார்கள் பள்ளி செல்லும் வயதை அடையாத தங்களின் குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். மருத்துவமனை வளாகத்தில் உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் சிறிய கழிவறையுடன் கூடிய காத்திருப்போர் அறை உள்ளது. ஆனால் இது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை. இதனால் பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களுக்குகீழ், புறநோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகள், காத்திருப்பது தொடர்கதையாக உள்ளது. தொடர்ச்சியாக அந்த மருத்துவமனைக்கு வரும் பெண்கள், வீட்டில் இருந்து பாய்களை எடுத்து அதில் குழந்தைகளை படுக்க வைத்து விட்டு செல்கின்றனர். தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதன் தொடர்ச்சியாக மகப்பேறு மருத்துவமனையில் குறிப்பிட்ட சில கட்டிடங்களில் தண்ணீர் வினியோகிக்கப்படுவதில்லை. இதனால் உள்நோயாளிகள் வீட்டிலிருந்து பெரிய கேன்களில் தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

          

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நோயாளிகளின் உறவினர்கள் இரவு, பகல் பாராமல் மருத்துவமனை வளாகத்திலேயே வளாகத்தில் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. சில சமயங்களில் மருத்துவமனை வளாகத்திலேயே நோயாளிகளின் உறவினர்கள் உண்டு உறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புறநோயாளிகள் பிரிவுக்கு வருபவர்களுக்கான கழிவறை மருத்துவமனையின் பின்புறத்தில் உள்ளது. ஆனால் கழிவறை எங்குள்ளது என்று தேடி திரிய வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கழிவறைக்கு சென்றால், அதுவும் முறையாக சுத்தம் செய்யப்படாத நிலையில் உள்ளது. இது ஏற்கனவே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பொதுமக்களுக்கு மேலும் எரிச்சல் ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. மருத்துவமனையை சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக, தற்காலிக பணியாளர்கள் பணியில்  நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த பணியாளர்கள் மருத்துமவனையை சுத்தமாக  பராமரிப்பதில்லை. மருத்துமவனையின் நிர்வாகம் அதை கண்டுகொள்வதில்லை. இதனால்  மருத்துவமனை வளாகத்தில் சுகாதார கேடு நிலவுகிறது. சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை உள்பட தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்வி இயக்கத்தின்கீழ் ஏராளமான மருத்துவமனைகள் செயல்படுகின்றன. அதிலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதே நிலை தொடர்கிறது. திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. சென்னையை போன்றே திருவள்ளூர் அரசு மருத்துமவனையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிளாக்குகள் அதிகரிக்கப்படவிலலை.

உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்படுத்தும் உடைகள், கிருமியை நீக்குவதற்காக முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் அழுக்கு முழுமையாக சுத்தம் செய்யப்படாத நிலையிலேயே மீண்டும் பயன்படுத்துவதற்காக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவில் குடிநீர் வசதிக்காக வைக்கப்பட்ட தண்ணீர் கேன் செயல்படவில்லை. அரசு மருத்துமனையில் இருந்து கழிவுப்பொருட்கள் தரம் பிரித்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று விதி உள்ளது.

ஆனால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கழிவுகளை உடனடியாக அகற்றுவதில்லை. அவ்வாறு அகற்றப்பட்ட குப்பை மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளேயே கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசு ஏற்படுகிறது. அதே போல் மருத்துவமனை வளாகத்துக்குள் நாய்கள் தொல்லை உள்ளது. புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு என அனைத்து பகுதிகளையும் நாய்கள் ஆக்கிரமித்துள்ளன. உள்நோயாளிகள் பிரிவு நோயாளிகளின் கட்டிலுக்கு கீழே நாய் படுத்து உறங்குகின்றன. மருத்துவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் காத்திருப்பதற்கான அறை எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால், நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்திருக்கும் நிலை உள்ளது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை குடிநீர் பிரச்னை பிரதானமானதாக உள்ளது. இந்த மருத்துவமனை பிரசவ வார்டு வளாகத்தில் முன்பே கழிவு நீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. போதுமான எணணிக்கையில் மருத்துவ உபகரணங்கள் இல்லை. இதனால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள், உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். முறையாக சுத்தம் செய்யப்படாத மருத்துவமனை வளாகம் வசதி குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை அவல நிலை தொடகிறது. அரசு மருத்துவமனைகளில் நிலவும் பிரச்னைகளை களைவதில், சுகாதாரத்துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: