×

கானத்தூர் கடற்கரையில் 2 வாலிபர்களை மிரட்டி பணம் பறித்த காவலர்கள்

* கஞ்சா கேஸில் உள்ளே தள்ளுவோம் என அடாவடி
* தலா ரூ.1000 பிடுங்கிக்கொண்டு அடித்து விரட்டினர்

துரைப்பாக்கம்: கானத்தூர் கடற்கரையில் 2 வாலிபர்களை மிரட்டி போலீசாரே பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவான்மியூர் நீதிபதிகள் குடியிருப்பில் வசிப்பவர் கார்த்திக் (25), தனியார் நிறுவன ஊழியர். இவர், மலையேறும் பயிற்சியும் அளித்து வருகிறார். கோவை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பலருக்கு மலையேறும் பயிற்சி அளித்துள்ளார். அடுத்த வருடம் இமயமலையில் ஏற உள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன் துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் கார்த்திக் பணியாற்றியபோது, சத்தியமங்கலத்தை சேர்ந்த யஸ்வந்த் (27) என்பவர் நண்பரானார்.

இவர்கள், கடந்த 16ம் தேதி சென்னை அடுத்த பனையூர் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கார்த்திக் மலையேறுவது குறித்து யஸ்வந்துக்கு கற்றுக் கொடுத்தார். மேலும் மலையேறும்போது டென்ட் அமைப்பது குறித்தும் செய்து காட்டினார். அப்போது, கானத்தூர் காவல் நிலைய காவலர்கள் பாலசுப்பிரமணியன் (25), தணிகாசலம் (27) ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அவர்கள், தங்களை முட்டுக்காடு காவல் நிலையத்தில் இருந்து வருவதாக அவர்களிடம் அறிமுகம் செய்துள்ளனர்.

பிறகு ‘நீங்கள் யார், இந்த நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இங்கு ஏன் டென்ட் அடிக்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளனர். அதற்கு கார்த்திக், ‘நான் மலையேறும் பயிற்சி அளிப்பவர். எனது நண்பருக்கு மலையேறும் பயிற்சி பற்றி விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறி உள்ளார். உடனே, ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்’ என்று கேட்டதும், திருவான்மியூர் நீதிபதி காலனியில் இருந்து வருகிறோம் என்று கார்த்திக் கூறியுள்ளார். ‘அப்ப உங்க அப்பா என்ன நீதிபதியா’ என்று கேட்டுள்ளனர். மேலும், ‘இந்த நேரத்தில் இங்கு இருக்க கூடாது என்பது தெரியாதா, உங்கள் மீது சந்தேகம் உள்ளது, சோதனை நடத்த வேண்டும்’ என்று கூறி இருவரின் பேன்ட், சட்டையை கழற்றி சோதனையிட்டுள்ளனர்.

அவர்கள் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. உடனே, கார்த்திக் ‘அதுதான் சோதனை செய்துவிட்டீர்களே, எங்களிடம் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் இல்லையே’ என்றனர். அதற்கு போலீசார், ‘நீங்கள் எங்களை எதிர்த்து பேசினால் உங்களை கஞ்சா கேஸில் போடுவோம்’ என்றனர். அதற்கு, எங்களிடம்தான் கஞ்சா இல்லையே என்றனர். ஆனால் போலீசார், ‘நாங்கள் ஏற்கனவே பிடிபட்ட கஞ்சாவை காவல் நிலையத்தில் வைத்திருக்கிறோம். அதை வைத்து உங்கள் மீது கேஸ் போட்டுவிடுவோம்.

உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, எடுங்கள் இல்லாவிட்டால் ஜட்டியுடன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும்’ என்று மிரட்டியுள்ளனர். பின்னர் கார்த்திக் தன்னிடம் இருந்த ரூ.1000ஐ கொடுத்துள்ளார். ஆனால், போலீசார் யஸ்வந்தை விடவில்லை. அவரை மிரட்டி, ரூ.1000ஐ வாங்கிவிட்டு டென்டை கழட்டிவிட்டு ஓடுங்கள் என்று இருவரையும் விரட்டி அடித்துள்ளனர். இதுகுறித்து கார்த்திக், யஸ்வந்த் ஆகியோர் நேற்று கானத்தூர் போலீசில் புகார் செய்தனர். உயர் போலீஸ் அதிகாரிகள் பணம் வசூலில் ஈடுபட்ட போலீசார் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலியே பயிரை மேய்ந்த கதை:
கடற்கரைக்கு வரும் இளம் காதலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவ வேண்டியது காவல்துறைதான். ஆனால், காவலர்களே வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்வது போன்றது. கடற்கரைக்கு வரும் காதலர்களை மிரட்டினால் அவர்கள் காவல் நிலையம் செல்ல மாட்டார்கள். தனியாக இருக்கும் நபர்களை மிரட்டி எளிதில் பணம் பறிக்கலாம் என்ற நோக்கத்துடன் தனது கடமையை விட்டு விட்டு பணம் பறிக்கும் செயலில் போலீசாரே ஈடுபடுகின்றனர். குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய போலீசாரே குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதும் அதற்கு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும் மிகவும் வெட்கக்கேடான செயல் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags : beach ,Kanathur , Kanathur beach, 2 young men, extortion, money laundering, guards
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...