ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு பெங்களூரை சேர்ந்த பெண் புரோக்கர் கைது

நாமக்கல்:  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், சட்ட விரோதமாக நடைபெற்ற குழந்தைகள் விற்பனை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே ராசிபுரம் போலீசார் 8 பேரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில் ராசிபுரத்தை சேர்ந்த நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி உள்பட 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து சேலத்தை சேர்ந்த நர்ஸ் சாந்தியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

குழந்தைகள் விற்பனை வழக்கில் சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி  கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், விசாரணையில் மொத்தம் 30 குழந்தைகள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தனர். அதே நேரம் சுகாதாரத்துறையினர், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 260 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கொடுத்துள்ளனர். இதுகுறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென இந்த வழக்கில் தொடர்புடைய பெங்களூருவை சேர்ந்த பெண் புரோக்கர் ரேகா (40) என்பவரை, நாமக்கல் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

பின்னர் ரேகாவை நாமக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் நேற்று மதியம் 12 மணிக்கு ரேகாவை சிபிசிஐடி போலீசார், நாமக்கல் 2வது மாஜிஸ்திரேட் ஜெயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். குழந்தைகள் விற்பனை வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 10வதாக ரேகா கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லிமலையில் குழந்தைகளை வாங்கி பெங்களூரு பகுதியில் ரேகா விற்பனை செய்து வந்துள்ளார். இதன் அடிப்படையில் இவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: