அஜால்.. குஜால்... விளையாட்டு!

கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், ஆய்வாளர்கள் என பலர், சுழற்சி முறையில் இரவுப்பணியாற்ற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், பல அதிகாரிகள் இரவுப்பணி பார்ப்பதில் இருந்து நழுவி விடுகின்றனர். இன்னும் சிலர் இரவுப்பணி பார்த்தாலும், ரோந்து ஜீப்பில் அமர்ந்து, தூங்கி விடுகின்றனர். மேல்மட்ட அதிகாரிகளிடமிருந்து வயர்லெஸ் அழைப்பு வந்தால், டிரைவர் உஷாராகி, ‘’ஐயா... டி.சி அழைக்கிறார்... ஐயா கமிஷனர் அழைக்கிறார்...’’ என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எழுப்பி விடுகிறார். இந்த பட்டியலில், ஒரே ஒரு உதவி கமிஷனர் மட்டும் படு கில்லாடியாக உள்ளார். அவர், இரவுப்பணி என்றால் விரும்பி ஏற்றுக்கொள்கிறார். காரணம், இரவு ஷிப்ட் பார்க்கும் பெண் போலீசாருடன் ஜீப்பில் அமர்ந்துகொண்டு அஜால்.. குஜால்... விளையாட்டில் ஈடுபடுகிறார். ஐயாவை எதிர்த்து ஒன்றும் ெசய்ய முடியாது என பல ெபண் போலீசார் சரண்டர் ஆகிவிடுகின்றனர். இந்த விவகாரம், மாநகர காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. குற்றப்பிரிவில் பணியாற்றும் அந்த உதவி கமிஷனர் விரைவில் சிக்குவார் அல்லது கோவை மாநகர காவல்துறையில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவார் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது.

நாங்கதான் டாப் லிஸ்ட்

திருப்பூர் தொழில் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை, லட்சத்தை தாண்டிவிட்டது. இவர்கள் வருகைக்கு பின் இந்நகரில் பான்பராக், ஹான்ஸ், பதான், குட்கா, கஞ்சா உட்பட பல்வேறு போதை பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது. இவை, தமிழக அரசால் தடை செய்யப்பட்டாலும், திருப்பூரில் இவற்றின் விற்பனை தாராளமாக நடக்கிறது. திருப்பூர் மாநகர போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதே இவற்றுக்கு முக்கிய காரணம். போதை பொருள் மொத்த வியாபாரிகள் மாதம்தோறும் திருப்பூர் மாநகர போலீசாரை வலுவாக கவனித்து விடுவதால், டோட்டல் போலீஸ் சைலண்ட். கட்டப்பஞ்சாயத்து, டாஸ்மாக் பார், சேவல் சூதாட்டம், சீட்டாட்டம் என பல வகைகளில் மாதம்தோறும் மாமூல் வந்தாலும், போதை பொருள் மொத்த வியாபாரிகள் கொடுக்கும் மாமூல்தான் டாப் லிஸ்ட்டில் உள்ளது. மேலிடத்துக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக, சில்லரை வியாபாரிகளை பிடித்து, மாதம்தோறும் அவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். அதனால், திருப்பூர் சில்லரை வியாபாரிகள் அபராதம் செலுத்த கோர்ட்டுக்கு நடையாய் நடக்கின்றனர். ‘’யானை போகிறத பார்க்காம, எறும்பு போகிறத மட்டும் துல்லியமா பார்க்குறாங்க... கொடுக்க வேண்டியதை கொடுத்தால், எல்லாம் சரியா நடக்குது...” என திருப்பூர் சில்லரை வியாபாரிகள் புலம்புகின்றனர்.

வாகன சோதனையில் கொள்ளைக்காசு அதிகாரி வலையில் சிக்கிய ‘இன்ஸ்’

மாங்கனி மாவட்டத்தில் வாழப்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஸ்டேஷனுக்கு, தேர்தல் நேர இடமாறுதலில் வந்தாராம் புது இன்ஸ்பெக்டர். பார்க்க கடுகடுப்பாக இருக்கும் இந்த இன்ஸ்பெக்டர், கடந்த 3 மாதத்தில் வாகன சோதனையில் மட்டும் பல லகரங்களை கல்லா கட்டிட்டாராம் ரஞ்சிதமானவரு. ரோட்ல நின்னு, விதிமுறையை மீறி வரும் டூவீலர், கார்களை பிடித்து விட்டால் போதும், அதன் உரிமையாளர்களை ஸ்டேஷனுக்கு வரவழைத்து டவுசர் வரைக்கும் கழற்றி எடுத்துட்டு தான் அனுப்புவாராம். லைசென்ஸ் இல்லாமல் சிக்கினால் கூட இரண்டாயிரம் பறி போயிருமாம். இப்படி கொள்ள காசு பார்த்த இன்ஸ்பெக்டரை, மாவட்ட தலைமையிடத்து அதிகாரி, வலை விரித்து கையும் களவுமாக பிடிச்சுட்டாராம். இருந்தாலும் தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், அந்த இன்ஸ்பெக்டர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாமல், அதிரடியாக தனது அலுவலகத்தில் பணி ஒதுக்கீடு செய்து தற்காலிகமாக மாற்றி விட்டாராம் அதிகாரி. தினமும் தலைமையிடத்திற்கு வரும் அந்த இன்ஸ்பெக்டர், அய்யய்யோ இப்படி சிக்கிட்டோமே என்று சக இன்ஸ்பெக்டர்களிடம் புலம்பி வருவது தான், மாங்கனி மாவட்ட போலீசில் ஹாட் டாபிக்காக உள்ளது.

ஒருமையில் பேசும் இன்ஸ்பெக்டர்: கொந்தளிக்கும் காக்கிகள்

தஞ்சை மாநகரில் 4 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் ஒரு காவல் நிலையத்திற்கு தேர்தலுக்கு முன்பு மாற்றப்பட்டு வந்த இன்ஸ்பெக்டர் வசூலில் படுகில்லாடி. ஏற்கனவே இவர் அம்மாப்பேட்டையில் பணியாற்றியபோது மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்து சம்பாத்தித்துள்ளார். லாரி உரிமையாளரிடமிருந்து மாதந்தோறும் பல லட்சம் மாமூல் வசூல் செய்து தவறாமல் மாவட்ட அதிகாரிக்கு கொடுத்ததால் இவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது தஞ்சை மாநகரில் இதய பகுதியான பழைய பேருந்து நிலைய பகுதி இவரது கன்ட்ரோலுக்கு வந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள லாட்ஜ், ஓட்டல், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், ஹோம் அப்ளையன்ஸ் கடைகள், இரவு நேர ஓட்டல்கள், ஸ்வீட் ஸ்டால்கள் என அனைத்து இடங்களிலும் வசூல் மழை கொட்டுகிறது. இது தவிர டாஸ்மாக் ஒட்டி அமைந்துள்ள கடைகளில் 24 மணி நேர சரக்கு விற்பனைக்கான மாமூல், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனைக்கான மாமூல், லாட்ஜ் மற்றும் குறிப்பிட்ட வீடுகளில் பலான தொழிலுக்கான மாமூல் என அது தனியாக வசூல் குவிகிறது. இந்நிலையில் ஏற்கனவே புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு வந்த ஓய்வு பெற்ற எஸ்ஐயை சட்டையை பிடித்து இழுத்து தாக்கிய சம்பவத்தால் ஓய்வு பெற்ற காவலர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இன்ஸ்பெக்டரை கண்டித்து அவரது முன்னிலையிலேயே எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய சம்பவங்களும் நடந்தது. இதெல்லாம் நடந்தாலும் அங்கு பணியில் உள்ள காக்கிகளை கண்டமேனிக்கு இன்ஸ்பெக்டர் திட்டுவதாக காவலர்கள் புலம்புகின்றனர். பெண் காவலர்களை வாடி, போடி எனவும், ஆண் காவலர்களை போடா, வாடா எனவும் மரியாதைக் குறைவாக திட்டுவதால் நொந்து போய் உள்ளனர். இதை எப்படி உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது என தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர்.

Related Stories: