ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் 5,000 வீடு, கடைகள் பூட்டி கிடக்கும் அவலம்

* கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு

* வாடகையை குறைக்க ஒப்புதல் கேட்டு கமிஷனருக்கு கடிதம்

சென்னை: ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் 5 ஆயிரம் வீடு, கடைகள் பூட்டியே கிடக்கின்றன. இதனால், அறநிலையத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வாடகையை குறைக்க ஒப்புதல் கேட்டு அந்தந்த கோயில் நிர்வாகம் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் அடக்கம். கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள், நிலங்கள் குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் கோயில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயில் கட்டிடங்களில் வாடகைக்கு எடுத்தோர் முறையாக கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வாடகை செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதன்பிறகு அந்த கட்டிடங்களை ஏலம் விட்டு மீண்டும் வாடகைக்கு விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் முதல் வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்ப கோயில் கட்டிடங்களில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மதிப்பிற்கே வீடு மற்றும் கடைகளின் வாடகை மாற்றி அமைக்கப்பட்டது. குறிப்பாக, மயிலாப்பூரில் ₹5 ஆயிரம் வாடகை வசூலித்த கடைகளுக்கு ₹10 ஆயிரம், ₹4 ஆயிரம் வசூலித்த வீடு வாடகை ₹9 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புதிய வீடு, கடைகள் ஏலம் அறிவிப்பு தொடர்பாக அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், வாடகை அதிகம் என்பதால் கடை, வீடுகள் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால், 5 ஆயிரம் வீடு மற்றும் கடைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் வாடகையை குறைப்பது தொடர்பாக கமிஷனரின் ஒப்புதல் கேட்டு கடிதம் எழுதினார்கள். ஆனால், கமிஷனர் வாடகை குறைப்பது தொடர்பாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் அந்த கடை, வீடுகள் தற்போது வரை பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இதனால், வாடகை மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் கோயில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் ெதரிவித்தார்.

Related Stories: