×

தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் தமிழகத்தில் நீர் நிலைகள் பராமரிப்பு, பாதுகாப்பு மேம்பாட்டுக்கு யோசனைகள்

சென்னை: மழையின் வளத்தால் மட்டும் வாழும் நிலையில் உள்ள தமிழக மக்கள், மழை பெய்யும் இடங்களிலேயே அதை தேக்கும் கட்டமைப்பாக குளங்களை அமைத்தனர். இயற்கையாக அமைந்த தருவை, அலம் போன்ற நீர்நிலைகளையும் பயன்படுத்தினர். கிராமத்தின் இருப்பு ஒரு குளம் அல்லது கண்மாயைச் சார்ந்து அமைந்து இருந்தது. ஆனால், ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு பாசன முறை மாறியது. கால்நடைகளுக்கு பதிலாக இயந்திரம், உணவு பயிர்களுக்கு பதிலாக பணப் பயிர்கள் விவசாயம் என மாற்றங்கள் ஏற்பட்டன. குளங்கள் தேவை குறைந்து ஆழ்துளை கிணறுகள், கிணறுகள் மூலம் பாசனம் செய்தனர். அதாவது, நிலத்திற்கு மேற்பரப்பில் தேக்கப்படும் நீருக்கு பதிலாக, நிலத்தின் கீழிருந்து தண்ணீர் எடுத்தனர். இதனால்தான் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து கவலை அளிக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது. இந்த நிலை மாற, அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது. அதற்கு தமிழகத்தில் முடங்கிப்போன நீர் நிலைகளை மீட்பதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி மூத்த பொறியாளர்கள், விவசாயிகள் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட முக்கிய யோசனைகள் அரசின் கவனத்திற்கு முன்வைக்கப்படுகின்றன.


* தற்போது நடைமுறையில் உள்ள ஆற்று வடிநிலப்பகுதி வாரியங்கள் போதுமானவை அல்ல. அதற்கு பதிலாக, நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சகம் தனியாக ஏற்படுத்தப்பட்டு அதன்கீழ் வனம், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகள், அலங்கள், தருவைகள், உப்பங்கழிகள், முகத்துவாரங்கள் நிர்வாகம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். நீர்வளத்தை பாதிக்கும் அனைத்து பிரச்னைகளிலும் இறுதி முடிவு எடுக்கும் அமைச்சகமாக இது அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்.

* விவசாயிகளின் நலன்களைப் புறக்கணிக்கும், தொழில்துறையின் நலன்களைப் பாதுகாக்கும் நீரைப் பண்டமாகப் பார்க்கும் நீர்க் கொள்கையை கைவிட வேண்டும்.

* உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைபெறும் நீர்வளம் நிலவளம் திட்டம் கைவிடப்பட வேண்டும். அதற்கு பதிலாக மக்கள் பங்கேற்புடன் வேலை உத்திரவாதத் திட்டத்தை விரிவுபடுத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்புடன் மக்கள் உழைப்பால் கண்மாய்களின் நீர்வளத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

* நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்க வேண்டும்.

* கண்மாய்களை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க அரசு கொண்டு வந்த சட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், அதை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழகத்தில் மழை வளம்

* தமிழ்நாட்டின் உள்பகுதியில் 848 மி.மீ. முதல் 946 மி.மீ. வரை மழை பொழிகிறது.

* கடற்கரை சமவெளிகளிலும் மலைப்பகுதிகளிலும் 1,666 மி.மீ வரை பெய்கிறது.

* 2 பருவமழைகளை தமிழகம் பெறுகிறது.

* ஜூன் முதல் செப்டம்பர் வரையில் தென்மேற்கு பருவமழை பெய்கிறது.

* அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழை பெய்கிறது.

* தமிழகத்திற்கு கிடைக்கும் நீரில் வடகிழக்கு மழையின் பங்கு 46%

* தென்மேற்கு பருவமழையின் பங்கு 35%

* கோடை மழையின் பங்கு 14% நீரை தருகிறது.

* குளிர்காலத்தில் பெய்யும் மழையால் 5% நீர் கிடைக்கிறது.

Tags : Water Levels, Maintenance, Security,
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...