வில்லங்கசான்றில் பிழை இருந்தால் திருத்தம் செய்வது எப்படி?

* பொதுமக்களை அலைய விடும் சார்பதிவாளர்கள்

* விவரம் தெரியாமல் தவிக்கும் மக்கள்

சென்னை: வில்லங்கசான்றில் பிழை இருந்தால் திருத்தம் செய்ய யாரை அணுகுவது என்று தெரியாத நிலையில் சார்பதிவாளர்கள் அலைய விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் வில்லங்க சான்று நகல்கள் கடந்த ஜனவரி 2ம் தேதி முதல் வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வில்லங்கசான்று பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்தநிலையில் வில்லங்கசான்று பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறும் போது, அந்த சான்றிதழில் குறைகள் எதுவும் இருந்தால் பொதுமக்கள் நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்தில் திருத்தம் செய்து தரப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பொதுமக்கள் வில்லங்க சான்றில் பிழைகள் இருந்தால் அவர்கள் திருத்தம் செய்ய தனியார் மென்பொருள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, கட்டணமில்லாத தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் புகார் தெரிவித்தால் முறையாக பதில் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இமெயில் மூலமும் புகார் அளித்தால் கூட அவர்கள் பிழையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் யாரிடம் கேட்பது என்பது தெரியாமல் பொதுமக்கள் தினமும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு தற்ேபாது வில்லங்கசான்றை சரி செய்து தரும் அதிகாரம் இல்லாததால் பொதுமக்களை சார்பதிவாளர்கள் திருப்பி அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் கூறும்போது, ‘சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக சான்று கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கிறோம். ஆனால், அந்த சான்றிலேயே பிழைகள் உள்ளது. இது தொடர்பாக சார்பதிவாளர்களிடம் கேட்டால் எங்களால் திருத்த முடியாது என்று கூறுகின்றனர். பதிவுத்துறை கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால் கூட முறையாக பதில் அளிப்பதில்லை. கடந்த காலங்களில் வில்லங்கசான்று ஏதாவது குறைபாடு இருந்தால் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருத்தி கொள்ள முடியும். தற்போது யாரை கேட்பது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

வில்லங்கசான்று பெற 3 மடங்கு கட்டணம் வசூல்: கடந்த 1980 முதல் தற்போது வரை சார்பதிவாளரின் டிஜிட்டல் கையெழுத்து உடன் வில்லங்க சான்று பெறுவதற்கு ₹441 கட்டணமாக பெறப்படுகிறது. மேலும், சாதாரணமாக வில்லங்க சான்று இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் வில்லங்கசான்று பெற பொதுமக்கள் தனியார் கணினி மையத்தை நாடுகின்றனர். அவர்கள், வில்லங்கசான்று பெற ₹1,500 வரை கூடுதலாக பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: