பாதுகாப்பு கவசம், ஊதிய உயர்வை வலியுறுத்தி பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை: சூனாம்பேட்டில் பாதுகாப்பு கவசம், ஊதிய உயர்வு உள்பட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான உப்பள ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த செய்யூர் தாலூகாவிற்கு உட்பட்ட சூனாம்பேடு பகுதியில் தனியார் உப்பளம் தொழிற்சாலை இயங்கி வருகிறது. உப்பு உற்பத்தி செய்யப்படும் இத்தொழிற்சாலையில் வில்லியம்பாக்கம், சூனாம்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெண்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தொழிற்சாலை சார்பில் உரிய பாதுகாப்பு கவசங்கள், போனஸ், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என இங்குள்ள தொழிலாளர்கள் கடந்த 25 ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்திருந்தனர். ஆனால்  தொழிற்சாலை நிர்வாகமோ, அரசோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 6ம் தேதி முதல் தங்களின் 13அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இங்குள்ள தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்றுமுதல் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் உப்பள தொழிலாளர்கள்  அலுவலகம் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இப்பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணும் வரையில் இப்போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: