பொதுமக்கள் பகலில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடுமையான அனல்காற்று வீசும்

சென்னை: தெலங்கானா மற்றும் வடக்கு கர்நாடகாவில் வெப்ப காற்று வீசுவதை அடுத்து தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கடுமையான அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் காலை 11 மணிக்கு மேல் மாலை 4 மணிக்குள் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரங்களில் அதிகரித்து வந்த வெயில் மற்றும் வெப்பம், வெப்ப சலனம் காரணமாக இடி மழை பெய்து படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனாலும், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதிகபட்சமாக திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரை, கரூர், திருச்சி 107 டிகிரி, பாளையங்கோட்டை 104 டிகிரி, சேலம் சென்னை 101 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையை பொருத்தவரையில் நேற்று 101 டிகிரி வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், காலை முதலே வெயிலின்தாக்கம் அதிகமாகவே இருந்தது. மதியம் நேரத்தில் 108 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. இதனால் மதிய நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்பட்டு வீட்டுக்குள் முடங்கினர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வங்கக் கடலில் பானி புயல் உருவாகியும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் ஏமாற்றத்தை உருவாக்கி சென்றுவிட்டது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி அதிகபட்சமாக 113 டிகிரி வரை சென்றுவிட்டது. இருப்பினும் வெயில் மற்றும் அனல் காற்று இன்னும்  குறையாத நிலைதான் நீடிக்கிறது. கடந்த 2018ம் ஆண்டில் இதே மே மாதத்தில் அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி வரை தான் வெயில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் 111 டிகிரி முதல் 113 டிகிரி வரை வேலூர் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் திருச்சியில் 107 டிகிரி வரை சென்றது, இந்த ஆண்டு ஆண்டும் அந்த அளவைத் தாண்டியுள்ளது. சேலத்தில் கடந்த ஆண்டு 107 டிகிரி உயர்ந்தது. இந்த ஆண்டு அந்த அளவைத் தாண்டிவிட்டது. இது போல பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஆண்டின் வெயில் அளவானது அதிகரித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் மே மாதத்தில் வெயிலின் சராசரி அளவு 40 டிகிரி செல்சியசாக இருந்தது. 2017ம் ஆண்டில் சராசரியாக 43 டிகிரி செல்சியதாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சராசரியாக 44 டிகிரி செல்சியஸ் வரை சென்றுள்ளது. இந்நிலையில், வட மாநிலங்களில் அதிகபட்சமாக 116(F) டிகிரி வரை வெயில் உச்சத்துக்கு சென்று வட மாநிலங்களில் பலர் வெயில் கொடுமையால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 1981ம் ஆண்டு முதல் 2010ம்  ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் 33 சதவீதம் அதிகரித்தப்படியே இருந்து வருகிறது. அதற்கு பிந்தைய ஆண்டுகளில் வெயில் குறைவதும் கூடுவதுமாக ஏற்ற இறக்கமாக காணப்பட்டது.  ஆனால் இந்த 2019ம் ஆண்டு கடந்த காலங்களை ஒப்பிடுகையில் வெயிலின் அளவு இயல்பைவிட கூடுதலாகவே இருக்கிறது.

அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் முடிய இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில் மேலும் வெயில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, வட மாநிலங்களில் நீடித்து வரும் வெயிலின் அதிகரிப்பு மற்றும் அனல் காற்று வீசுவதை அடுத்து தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் வெப்ப காற்று வீசிவருகிறது. அதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று அனல் காற்று வீசும் வாய்ப்புள்ளது. அதனால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே, வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பெரியநாயக்கன் பாளையம், செங்கோட்டை 40 மிமீ, பேச்சிப்பாறை, பரமக்குடி 30 மிமீ, திருச்சி, சிவகிரி, உத்தமபாளையம், தென்காசி குன்னூர், வாழப்பாடி 20 மிமீ, கூடலூர், திருப்பத்தூர், ஆண்டிப்பட்டி, சங்ககிரி, போடி நாயக்கனூர், நாமக்கல், சிவகங்கை, சேரன்மாதேவி 10 மிமீ  மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: