×

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறைந்தால் கிட்னி பாதிக்கும்: டாக்டர்கள் எச்சரிக்கை

வேலூர்: கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் சிறுநீர் தொற்றுகளால் கிட்னி பாதிக்கும் அபாயம் ஏற்படும். எனவே, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 105 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதேபோல் நேற்றும் 106.3 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. இந்நிலையில், கோடைக்காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் சிறுநீர் தொற்றுகளால் கிட்னி பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சிறுநீர் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘கோடைக்காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். எனவே, அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அதேபோல், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். சிறுநீரை அடக்கி வைக்க கூடாது. சிறுநீர் தாரையில் கிருமிகள் தொற்று ஏற்பட்டால், சிறுநீர் பாதையை முழுமையாக பாதித்து கிட்னியும் பாதிக்கும் அபாயம் ஏற்படும். சிறுநீர் பாதையில் எரிச்சல், அடிவயிறு மற்றும் முதுகின் பின்பக்கம் வலி ஏற்படுதல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளின் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெறுவதால் பெரிய பாதிப்புகளை தவிர்க்க முடியும். தொடர்ந்து அதிகளவில் தண்ணீர், இளநீர் உள்ளிட்டவற்றை குடிப்பதால் பலன் கிடைக்கும். கோடைக்காலத்திலும் தண்ணீரை காய்ச்சி, ஆற வைத்து குடிக்க வேண்டும். தூய்மையான ஆடைகளை அணிவது அவசியம். உடலில் அரிப்பு ஏற்படுவதும் சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Doctors , Kidney, summer time
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை