திண்டிவனம் அருகே ஏசி வெடித்து 3 பேர் உயிரிழந்ததாக நாடகமாடியது அம்பலம்: மகன், மனைவி கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சொத்து தகராறில் தாய், தந்தை, தம்பியை கொன்றவர் கைது செய்யப்பட்டார். மூவரும் ஏசி வெடித்து பற்றிய தீயால் உயிரிழந்ததாக நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது. திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்புராயப்பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜி, இரும்புப் பட்டறை மற்றும் இருசக்கர மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உரிமையாளர் ஆவார். அவரது மனைவி கலைச்செல்வி, ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்த தம்பதியின் மூத்த மகனான கோவர்த்தனன் அதிமுகவில் பிரமுகராக உள்ளார். 6 மாதத்திற்கு முன்னர் தீபா காயத்ரி என்ற பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. அவரது ஒரே சகோதரரான கெளதமனுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், செவ்வாய் கிழமை அன்று வீட்டில் உள்ள ஒரு அறையில் தாய், தந்தையுடன் கெளதமன் உறங்கிக் கொண்டிருந்தார். அருகில் உள்ள அறையில் கோவர்த்தனன் தனது மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், மறுநாள் அதிகாலை கெளதமன், ராஜி, கலைச்செல்வி ஆகிய மூன்று பேரும் அறையில் எரிந்து கிடந்தனர். ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தே இதற்குக் காரணம் என முதலில் கூறப்பட்டது. இருப்பினும் ராஜின் உடலில் இருந்து வழிந்த ரத்தம் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கருகிய உடலில் இருந்து எப்படி ரத்தம் வழியும் என கேள்வி எழுந்தது. அதேபோல் ஏசியின் உள் பக்கம் மட்டும் எரிந்து கிடந்த நிலையில், வெளியில் உள்ள எந்திரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததும் சந்தேகத்தை வலுவாக்கியது. அறையில் கிடந்த மண்ணெண்ணெய் கேனும் போலீசின் சந்தேகத்தை தூண்டி விட்டது. கோவர்த்தனனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சொத்துக்காக தாய், தந்தை மற்றும் சகோதரனை கொலை செய்ததை கோவர்த்தனன் ஒப்புக் கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

தனது குடும்பத்தில் சொத்து உள்ளிட்ட அனைத்திலும் கெளதமனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் புதுச்சேரியில் இருந்து கூலிப்படையினரை வரவழைத்து பெற்றோரையும், சகோதரையும் கோவர்த்தனன் தீர்த்துக் கட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனது மனைவியும் இதற்கு உடந்தையாக இருந்ததாக கோவர்த்தனன் கூறவே, அவரையும் போலீசார் கைது செய்தனர். காலி பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் தீயைக் கொளுத்தி, பெற்றோர் உறங்கிய அறையில் வீசியதாகவும், பின்னர் அறை முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி கொலை செய்ததாகவும் கோவர்த்தனன் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். கூலிப்படையினர் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: