முத்தரப்பு கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன்

டப்ளின்: அயர்லாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடந்துவந்தது. இதில் லீக் போட்டியில் ஒவ்வொரு அணியுடன் மற்ற அணி தலா 2 போட்டிகளில் மோதின. லீக் சுற்றில் வங்கதேசம் 4 போட்டியில் 3ல் வெற்றி, ஒரு போட்டி ரத்து என 14 புள்ளிகளுடன் முதலிடமும், வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டியில் வெற்றி, 2ல் தோல்வி என 9 புள்ளிகளுடன் 2வது இடமும் பிடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.நேற்று இறுதி போட்டி டப்ளின் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீசின் சாய் ஹோப்,சுனில் அப்ரிஸ் பேட்டிங்கை தொடங்கினர். 20.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 131 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழையால் சுமார் 4மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 24 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.  சாய் ஹோப் 64 பந்தில் 74 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அம்ரிஸ் 78 பந்தில் 69, பிராவோ 3 ரன்னில் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

Advertising
Advertising

இதையடுத்து வங்கதேச அணிக்கு டக்வெர்த் லீவிஸ் விதிப்படி 24 ஓவரில் 210 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் தமீம் இக்பால் 18 ரன்னில் ஆட்டம் இழக்க மற்றொரு வீரர் சவுமியா சர்க்கார் 41 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 66 ரன் எடுத்தார். பின்னர் வந்த சபீர் ரகுமான் 0, முஸ்பிகுர் ரகிம் 22 பந்தில் 36, முகமது மிதுன் 17 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.மொசாடெக் ஹூசைன் ஆட்டம் இழக்காமல் 24 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 52 ரன் எடுக்க வங்கதேசம் 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.  மொசாடெக் ஹூசைன் ஆட்டநாயகன் விருதும், வெஸ்ட் இண்டீசின்  சாய் ஹோப் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். ஏற்கனவே லீக் சுற்றில் 2 போட்டியிலும் வங்கதேசம் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: