பாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி ஜேசன் ராய் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அபார வெற்றி

நாட்டிங்காம்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒரேஒரு டி.20 போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், 2வதுபோட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், 3வதுபோட்டியில்,6 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து  வெற்றிபெற்றது.இந்நிலையில் 4வது ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பகார் ஸமான் 50பந்தில் 57 ரன், முகமது ஹபீஸ் 55 பந்தில் 59 ரன், சோயிப் மாலிக் 26 பந்தில் 41 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக பாபர் அஸம் 112 பந்தில் 13 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 115 ரன்கள் விளாசினார். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 21 ரன்னில் (14பந்து) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் டாம் குர்ரன் 4, மார்க் வுட் 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் 341 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் வின்ஸ் 39 பந்தில் 43, ஜோரூட் 41 பந்தில் 36 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பட்லர், மொயின் அலிஆகியோர் டக்அவுட் ஆக மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் 89 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 114 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். 49.3 ஓவரில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 64 பந்தில் 5பவுண்டரி, 3சிக்சருடன் 71 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வெற்றி மூலம் 3-0 என இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது. சதம்விளாசிய ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடைசி போட்டி நாளை நடக்கிறது.

Related Stories: