பெண் தற்கொலை விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யாத இன்ஸ்பெக்டருக்கு சிறை: சாத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சாத்தூர்: பெண் தற்கொலை விவகாரத்தில் வழக்கு பதியாத சிவகாசி இன்ஸ்பெக்டருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள மடத்து தெருவை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி சுகன்யா (19). கடந்த 2013ல் பக்கத்து வீட்டில் குடியிருப்பவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சுகன்யா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயம் அடைந்த அவரை, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுகன்யாவிடம் சிவகாசி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஜோசப்ஜாய் வாக்குமூலம் பெற்றார். இதனிடையே சிகிச்சை பலனின்றி சுகன்யா இறந்தார்.

Advertising
Advertising

இதையடுத்து சுகன்யா இறப்புக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சிவகாசி கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார். இதனால் நீதிமன்றம் உத்தரவின்பேரில், ரவிச்சந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு சாத்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி சண்முகவேல்ராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை பெற்ற இன்ஸ்பெக்டர் இன்னும் 6 மாதத்தில் ஓய்வு பெறப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: