ஆற்காடு அருகே சடலங்கள் தோண்டி பிரேத பரிசோதனை கணவன், குழந்தையை கொன்று புதைத்த கொடூர மனைவி: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

ஆற்காடு: ஆற்காடு அருகே காதல் கணவர், குழந்தையை கொன்று புதைத்தது ஏன் என்று மனைவி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன், குழந்தையை கொன்று விட்டதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.

வேலூர் மாவட்டம், திமிரி அடுத்த பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நிர்மலா. இவர்களது மகன் ராஜா(25) எலக்ட்ரீஷியன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ராஜா, சாத்தூர் மந்தைவெளி தெருவை சேர்ந்த பெருமாள், விஜய் தம்பதியரின் மகள் தீபிகா(19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரவீன்குமார்(1) என்ற மகன் உள்ளான். கடந்த 13ம் தேதி முதல் ராஜாவும், பிரவீன்குமாரும் காணாமல் போனார்கள். இதுகுறித்து தீபிகா அங்குள்ளவர்களிடம் கூறி உள்ளார். இந்த தகவல் ராஜாவின் சகோதரிகளுக்கு தெரியவந்தது. உடனே ராஜா வீட்டுக்கு வந்து தீபிகாவிடம் விசாரித்தனர். வீட்டில் ரத்தக்கறை போல இருக்கிறதே என கேட்டுள்ளனர்.
Advertising
Advertising

அதற்கு தீபிகா ஏன் வீணாக சந்தேகப்படுகிறீர்கள்? ரத்தக்கறை இல்லை என்று கூறி சமாளித்தார். ஆனால், அவர்களின் சந்தேகம் தீரவில்லை. இதனால்,  ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தீபிகாவிடம் விசாரித்தனர். அப்போது, 12ம்தேதியன்று கணவருடன் சண்டை ஏற்பட்டதாகவும், அன்று இரவு ராஜா வீட்டில் தூங்கும்போது கணவன் தலையில் கல்லைபோட்டு கொலை செய்து புதைத்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். பின்னர், புதைத்த இடத்தை தீபிகா போலீசாரிடம் காண்பித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தீபிகா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ராஜாவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. 12ம் தேதியன்று குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தீபிகா அன்று இரவு தூங்கும்போது கணவனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். அந்த சத்தம் கேட்டு குழந்தை எழுந்து அழுதுள்ளது. கணவரை கொலை செய்தது போலீசில் தெரிந்தால், தான் ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இதனால், தனது குழந்தையை கொலைக்காரியின் மகன் எனக்கூறுவார்கள் என்று கருதி தனது குழந்தையை துப்பட்டாவால் கழுத்து நெரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் சடலங்களை வீட்டின் அருகே புதைத்துள்ளார். அதன்பிறகு எதுவும் தெரியாததுபோல் தீபிகா அந்த வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் கணவரின் மீதான ஆத்திரத்தில் ஆடைகள் மற்றும் ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தீபிகா எரித்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே, நேற்று மதியம் தாசில்தார் வத்சலா மற்றும் போலீசார் முன்னிலையில் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. கணவரையும், மகனையும் கொலை செய்த தீபிகா ஒருவரே எப்படி 2 பேரின் சடலத்தையும் கொண்டு வந்து புதைத்திருக்க முடியும். எனவே, இதற்கு வேறுயாராவது உடந்தையாக இருந்தனரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன்படி, ராஜாவின் நண்பர் ஜெயராஜ் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு  இவர்களின் திருமணம் நடந்து சிறிது நாளில் ராஜாவின் தந்தையான சுப்பிரமணி  இறந்தார். அதன்பிறகு, 2 நாட்களில் அவரது மனைவியான நிர்மலாவும்  உயிரிழந்திருக்கிறார். இதற்கும் தீபிகாதான் காரணமாக இருக்கும் என்று ராஜாவின்  சகோதரிகள் கூறினர். ஏனெனில், தீபிகாவிற்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளது என்றும் ராஜாவின் சகோதரிகள் குற்றம்சாட்டினர்.

10 நாளுக்கு முன்பே தோண்டிய பள்ளம்

கணவன், மகனை கொலை செய்ய திட்டமிட்ட தீபிகா, ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பே வீட்டின் அருகில் பள்ளம் தோண்டி வைத்திருந்தார். அதன் மீது காய்ந்துபோன முள்வேலி செடிகள் மற்றும் பனை மர ஓலைகள் ஆகியவற்றை போட்டு மூடி வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனவே கணவன் மற்றும் மகனை தீபிகா திட்டமிட்டு கொலை செய்து புதைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: