அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரான் போர் கப்பல்கள்... அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம்

பாக்தாத்: அமெரிக்க கடற்பரப்பை நோக்கி ஈரான் நாட்டு போர் விமானங்கள் மற்றும் சிறிய ரக போர் கப்பல்கள் முன்னேறி செல்வது அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. முன்னதாக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளுடன் கடந்த 2015ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது. இதனால், அமெரிக்காவுக்கு பயனில்லை என்று கருத்து தெரிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்தாண்டு  அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். இது அமெரிக்கா - ஈரான் உறவில் மனக்கசப்பை ஏற்படுத்தியது. மேலும் ஈரானை தனது கருப்பு பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.

இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா  பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்து, ஈரானை தமது வழிக்கு கொண்டு வர அமெரிக்க போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள், ஏவுகணைகளை ஈரான் நாட்டை நோக்கி நகர்த்தியது. இந்த நிலையில் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஈரான் நாட்டு ராணுவம் சிறிய ரக போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்க கடற்பரப்பை நோக்கி நகர்த்தி வருகிறது.

இதனிடையே ஈரான் நாட்டுடன் போர் புரியும் சூழல் உருவாகாது என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு பாதுகாப்பாக தளவாடங்களை அனுப்பியதாக அமெரிக்கா கூறியதை ஈரான் நிராகரித்தது. இரு நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக பாக்தாத் மற்றும் எர்பில் நகர தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்கா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: