பாகிஸ்தானில் உள்ள கிராமத்தில் வேகமாக பரவிய எச்.ஐ.வி தொற்று..: 2 வாரங்களில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு!

இஸ்லாமாபாத்: தெற்கு பாகிஸ்தானில் உள்ள கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள லர்கானாவின் புறநகர்ப் பகுதியான வஸாயோ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட போது தவறான உபகரணங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவியது தெரியவந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 500க்கும் மேற்பட்டோர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த விவகாரத்தில் அந்த பகுதியில் க்ளினிக் வைத்துள்ள குழந்தைகள் மருத்துவரான முசபர் கங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் எச்ஐவி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில் வேண்டுமென்றே அவர் நோய் தொற்றை பரப்பினாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

ஆனால், தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றத்தை அவர் மறுத்துள்ளார். இதற்கிடையில், சுமார் 5 இடங்களில் தற்போது கிராம மக்கள் அனைவருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோயாளிகள் அதிகளவில் வருகிறார்கள், அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை சேமிப்பதற்காக, மருத்துவர்கள் ஒரே ஊசியை பல நோயாளிகளுக்கு சோதனை செய்ய பயன்படுத்தியதே எச்.ஐ.வி தொற்றுக்கான முக்கிய காரணம் என சிந்து மாகாண எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் திட்ட மேலாளர் சிகந்தர் மெமோன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 2017ம் ஆண்டு மட்டும், புதிதாக 20,000 பேர் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டனர். தற்போது ஆசிய அளவில் அதிக எச்.ஐ.வி நோயாளிகளை கொண்டுள்ள இரண்டாவது நாடாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது என்று ஐ.நா சபை. தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: