அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி ஹூவாய் போன் நிறுவனங்களுக்கு தடை: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலால் நடவடிக்கை

வாஷிங்டன்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே, அமெரிக்கா - சீனா ஆகிய இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகப் போரை இந்த தடை உத்தரவு மேலும் தீவிரப்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த தடையை அமல்படுத்தும் உத்தரவில் கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில் எந்த ஒரு தனி நிறுவனத்தையோ அல்லது நாட்டையோ குறிப்பிடவில்லை என்றாலும், இது சீனாவின் ஹூவாய் போன் நிறுவனங்களுக்கு வைத்த ‘செக்’ என்றே அதிகாரிகள் சூசகமாகத் தெரிவித்தனர். அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், உலகில் மிகப் பெரிய தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து 5ஜி அலைக்கற்றையை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் உத்தரவில் கையெழுத்திட்டவுடன் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் சீனாவின் ஹூவாய் போன் நிறுவனங்களையும் சேர்க்க நடவடிக்கை ெடுத்துள்ளதாக வர்த்தகத் துறையின் பீரோ ஆப் இன்ஸ்டஸ்ரி அன்டு செக்யூரிட்டி (பிஐஎஸ்) தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவு கொள்கைக்கு எதிரான செயல்களில் ஹூவாய் நிறுவனம் ஈடுபட்டுள்ளதை பொருத்துக் கொள்ள முடியாது என்று வர்த்தகத் துறை குற்றஞ்சாட்டியது. இதன் விளைவாக, அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை மற்றொரு நிறுவனத்துக்கு விற்கவோ அல்லது மாற்றம் செய்யவோ அமெரிக்க வர்த்தகத்துறையின் பிஐஎஸ்ஸிடம் லைசென்ஸ் பெற வேண்டும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் எந்த ஒரு நிறுவனத்துக்கும் லைசென்ஸ் வழங்கப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தி உள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்பம் திருடப்படுவதற்கு எதிரான அமெரிக்க அதிபரின் இந்த அதிரடி நடவடிக்கை உலக அளவில் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. சீனாவின் ஹூவாய் நிறுவனம் செல்போன் அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றது. சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தடை உத்தரவால் சீனா உள்பட வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் செய்ய புதிதாக உரிமம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: