குடும்ப உறவுகளை பார்க்காமல் திறமை அடிப்படையில் குடியுரிமை வழங்க அமெரிக்க அதிபர் விருப்பம்

வாஷிங்டன்: வெளிநாட்டினருக்கு குடும்ப உறவுகள் அடிப்படையில் குடியுரிமை (கிரீன் கார்டு) வழங்காமல், திறமை படைத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய முறையை அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு ஆண்டு தோறும் 11 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீத குடியுரிமை வழங்கப்படுகிறது. திறன் அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்த முறையை மாற்ற அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வேலை மற்றும் திறமை அடிப்படையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கிரீன் கார்டுகளை வழங்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறுகிறார். இந்த முறை அமல்படுத்தப்பட்டால் எச்1பி விசாவில் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பல இந்தியர்களுக்கு விரைவில் கிரீன் கார்டு கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertising
Advertising

அமெரிக்காவின் எல்லை பாதுகாப்பை பலப்படுத்துதல், திறமை வாய்ந்தவர்கள், முதுநிலை பட்டம் பெற்றவர்கள், தொழில்கல்வி படித்தவர்களுக்கு மட்டுமே எளிதில் அமெரிக்க குடியுரிமை பெறும்  வகையில் கிரீன் கார்டு வழங்கும் முறையை மாற்றியமைத்தல் போன்ற திட்டங்களில் டிரம்ப்பின் மருமகன் ஜேர்ட் குஷ்னர் கவனம் செலுத்தி வருகிறார். குடியுரிமை சீர்திருத்தக் கொள்கையில் அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது கடினமான பணி என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் தனது குடியரசு கட்சி எம்.பி.க்களை அதிபர் டிரம்பால் சமாதானப்படுத்த முடியும். ஆனால் சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையிலான எதிர்க்கட்சியினர் டிரம்ப்பின் குடியுரிமை கொள்கைக்கு எதிராக உள்ளனர். 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியுரிமை விவகாரத்தை முக்கிய விஷயமாக கொண்டு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

Related Stories: