கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இரண்டு இந்தியர்கள் பலி

காத்மண்ட்: நேபாளத்தின் கஞ்சன்ஜங்கா மலையேற்றத்தில் ஈடுபட்ட இந்திய மலையேற்ற வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். உலகிலேயே மூன்றாவது உயரமான சிகரமாக கஞ்சன்ஜங்கா திகழ்கிறது. இதன் உயரம் 8,586 மீட்டர். ஆண்டுதோறும் மார்ச் முதல் மே வரை சிகரத்தில் ஏறி சாதனை படைக்கும் முயற்சி நடக்கும். இதில் ஏராளமான மலையேற்ற வீரர்கள் குழுவாக மலையேற்ற பயிற்சியை மேற்கொள்வார்கள். வெளிநாடுகளில் இருந்தும் மலையேற்ற வீரர்கள் வந்து இதில் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பிப்லாப் பைதியா(48) மற்றும் குந்தல் கரார் (46) ஆகிய இருவரும் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இதில் பிப்லாப் வெற்றிகரமாக சிகரத்தின் உச்சியை அடைந்தார். ஆனால் செல்லும் வழியிலேயே குந்தல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் சிகரத்தில் இருந்து கீழே இறங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால்   சக மலையேற்ற வீரர்கள் மூலமாக 8,400 மீட்டர் உயரத்தில் உள்ள நான்காவது முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் அவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட மலையேற்ற குழுவில் இடம்பிடித்து இருந்தனர். இந்த குழுவில் இடம்பெற்ற மற்றொரு மலையேற்ற வீரர் சிலே மாயமாகியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: