×

நாளை உலக ரத்தக்கொதிப்பு தினம்

‘‘காலையில எழுந்திருச்சு தொலையுதா இந்த சனியன்... 8.30 மணிக்கு வேன் வந்திரும். ஸ்கூலுக்கு போகணும்னு ஒரு அக்கறை இருக்கா இதுகளுக்கு...’’ என்று காலையிலே பள்ளி செல்லும் குழந்தைகளை எழுப்பும் 30 வயது தாய்மார்களுக்கு ‘பி.பி’ எனப்படும் ரத்த அழுத்த நோய் வந்து விடுகிறது என்றால் நம்ப முடிகிறதா?

இந்தியாவில் 30 - 40 வயதிற்குள் உள்ளவர்களுக்கு 10ல் ஒருவருக்கும், 40-50 வயதிற்குட்பட்டவர்களுக்கு 8ல் ஒருவருக்கும், 50 வயதை கடந்தவர்களில் 5ல் ஒருவருக்கும் ரத்தம் அழுத்த நோய் இருப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. அதை நாம் முறையாக சோதித்து தெரிந்து கொள்வதில்லை. அவ்வளவுதான்.

ரத்த அழுத்தம்னு ஒண்ணு இருக்கிறது தெரியும். அது என்ன? எவ்வளவு இருந்தால் நல்லது. அதை எப்படி கட்டுப்படுத்துறது? இப்படி பல கேள்விகள் வருவதற்கு முன்பு, நாளை ரத்த அழுத்த தினம் (மே 17) என்பதை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

சரி... வாங்க பேசலாம்... உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு ரத்த அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வை கடந்த 2005ல் இருந்து துவக்கியது. அந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் மே 17ம் தேதியை உலக ரத்த அழுத்த தினமாக அறிவித்தது. உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும்போது 120/80 மி.மீ பாதரச அளவாக இருக்க வேண்டும். மருத்துவர்கள் 100/70 மிமீ முதல் 140/90 மிமீ வரை உள்ள ரத்த அழுத்தம் இயல்பானதுதான் என தெரிவிக்கின்றனர். இதை தாண்டும்போது ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவராக கருதப்படுகிறார்.

எப்படி ஏற்படுகிறது? :

முன்பெல்லாம் நாம் வீட்டு உணவுகளை சாப்பிட்டு வந்தோம். தானிய உணவு வகைகள் அதில் அதிகம் இடம் பெறும். உடல் ஒரு கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. நோய்களும் சீண்டாமல் இருந்தது. இப்போது அப்படியா? ஓட்டல்கள், துரித உணவகங்களுக்கு சென்று வாயில் நுழையாத பெயர் கொண்ட, ஆனால் வாயில் நுழையும் பதார்த்தங்களை ருசியாக இருக்கிறது என்று அள்ளிப் போட்டுக் கொள்கிறோம். இதனால் உடல் எடை அதிகரித்து உடலின் ரத்த அழுத்தம் மாறுபடுகிறது. அளவுக்கதிகமான சிகரெட், மது உள்ளிட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்தும்போது, உடலில் ரத்த அழுத்தம் ஏறி, இறங்குகிறது. உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு வரை கொண்டு விடும்.

மூக்கில் ரத்தம் கசிகிறதா? அடிக்கடி தலைச்சுற்றல் வருகிறதா? உடல் மயங்குகிறதா? உடனே டாக்டரை பார்க்க சென்று விடுங்கள். இவையெல்லாம்தான் ரத்த அழுத்தம் உங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை மணிகள். சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் இதன் பெரிய பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

ரத்தக்கொதிப்பு பெரும்பாலும் சிறுநீரகங்களை பாதிக்கும் என்பதால், இந்த பிரச்னை உள்ளவர்கள் உணவில் உப்பை சரிபாதியாக குறைத்துக் கொள்வது நல்லது. உப்புதான் இதற்கு முதல் எதிரி. அப்பளம், கருவாடு, ஊறுகாய் உள்ளிட்டவைகளை கண்டிப்பாக ஒதுக்கியே தீர வேண்டும். சில நேரங்களில் நம் உடலில் ஒரு பிரச்னை வந்தால், நமக்கு பிடித்தமான உணவைத்தான் முதலில் சாப்பிட வேண்டாம் என்பார்கள் மருத்துவர்கள். என்ன செய்வது? வேறு வழியில்லை.

Tags : World Blood Day , World Blood Day
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்