×

பெண்களுக்கான வாழ்வியல் உரிமை சட்டங்கள்: சட்டம் அறிவோம்

முன்னொரு காலத்தில் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று ஆணாதிக்க சமுதாயம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இப்போது எந்த உடையை பெண்கள் அணியவேண்டும், எந்த உடையை அணியக்கூடாது என்று கட்டளையிட்டு பெண்களை அடிமைப்படுத்த முற்படுகிறது இந்த ஆணாதிக்க சமுதாயம். இப்போது வார இதழ், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் பெண்களின் உடை விஷயத்தில் மூக்கை நுழைத்து பெண்ணுரிமையை பறிக்க முயல்கின்றன. இதுபோன்ற அடிமைத்தனம் உங்கள் வீட்டில் தலையெடுக்க ஆரம்பித்தால் உடனடியாக நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

உங்கள் வீட்டில் இருக்கும் அண்ணன், தம்பி, அப்பா, கணவன், ஆண் நண்பன், கூடி வாழும் துணைவன், அல்லது மற்ற ஆண் உறவினர்கள் யாராவது உங்களை குறிப்பிட்ட உடைதான் அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலோ அல்லது உங்களுக்குப் பிடித்த உடையை அணியக்கூடாது என்று கட்டாயப்படுத்தினாலோ உடனடியாக “பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விடலாம். சட்டங்கள் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் எதற்காகவும் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். பிறகு சுதந்திரத்தை இழந்து அடிமைகளாகிவிட நேரிடும்.

உடை விஷயத்தில் எப்படி குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று யோசிக்கலாம். பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் முக்கியமான சாராம்சத்தை சட்டத்தில் பெண்ணுக்கு குடும்பத்தில் நடக்கும் எந்த வகையான வன்முறையிலிருந்தும் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாப்பு பெறலாம். அப்படியும் உங்களுக்குள் ஒரு சந்தேகம் வரலாம். நான் அணியும் உடையை அணியக்கூடாது என்று கூறுவது குடும்ப வன்முறையாகுமா? என்று எண்ணுவீர்கள். குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தின் வரையறைபடி அதுவும் ஒரு குடும்ப வன்முறைதான்.

பெண்கள் தங்களுக்குப் பிடித்த உடையை அணியும்போது அது கவர்ச்சியாக இருக்கிறது. அதனால் அதை உடுத்தக்கூடாது என்று பெண்களின் ஆசைக்கு தடை போடுவது அவர்களது உணர்ச்சிகளையும், மனதையும் காயப்படுத்துவதாகும். மேலும் அதற்கு ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அப்பப்பா எத்தனை கடுமையானதாக இருக்கும் பட்சத்தில் இந்த சட்டத்தின் மூலம் யாரெல்லாம் பாதுகாப்பு பெறலாம் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதன்படி சகோதரிகள், விதவைகள், தாய், மகள், திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு ஆடை விஷயத்தில் அநியாயம் ஏற்படுவதாக நினைத்தால், இச்சட்டத்தின்டி தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

அதே சமயத்தில் கலாச்சார சீரழிவுக்கு வழி வகுப்பதை தடுப்பதிலும் சட்டம் தனது உரிமையை நிலை நாட்டியுள்ளது. தன்னை ஆடை விஷயத்தில் கட்டுப்பாடு விதிப்பதாக பெண் ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு யார் மீது வேண்டுமானாலும் புகார் கொடுக்க முடியாது. அப்படி புகார் கொடுத்தாலும், அதை சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணை நடத்துவார்கள். உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரே முறை புகார் கொடுத்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை. அறிவுரை சொல்ல அனுப்பி வைப்பார்கள். பெண்களை அச்சுறுத்துவதை தொடர்ந்தால் மட்டுமே மேற்கூறிய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொய் புகார் பெண்களால் ஆண்களுக்கு கொடுமை:

மாமியார், மாமனாரை சிறையில் தள்ள வேண்டும் என கருதும் மருமகள்களால் தொடரப்படும் வரதட்சணை கொடுமை வழக்குகள் அதிகரிப்பதால், அந்த சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி நம் நாட்டில், வரதட்சணை கேட்பதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம். ‘‘வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர்’’ என, மணமகன் வீட்டார் மீது மணமகள், போலீசில் புகார் கொடுத்தால் போதும். சம்பந்தப்பட்ட மணமகன் வீட்டார் உடனடியாக கைது செய்யப்படுவர்; குற்றம் நிரூபிக்கப்படுமானால், மூன்றாண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்; அவர்களால் ஜாமீனில் வெளியே வர முடியாது.

வரதட்சணை குற்றங்களை தடுக்க, இத்தகைய கடுமையான சட்டப் பிரிவுகளை, இந்திய தண்டனை சட்டம் அளிக்கிறது. இதை சில பெண்கள், தவறாக பயன்படுத்துவதால், வரதட்சணை கொடுமைக்கு எதிரான, இந்திய தண்டனை சட்டம், 498 - ஏ பிரிவை திருத்தம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, மத்திய சட்ட அமைச்சகமும், நீதிபதி மாலிமத் கமிஷனும் பரிந்துரை செய்துள்ளன. அதன்படி, நீதிமன்றத்தில் விசாரணை துவங்கினாலும், கணவன் - மனைவி சமாதானமாக செல்ல ஏதுவாக திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் சிறை தண்டனைக்கு பதில், குறிப்பிட்ட தொகையை அபராதமாக வழங்கினால், தண்டனையிலிருந்து தப்பலாம் என திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் முறையே 99 ஆயிரம், 1.06 லட்சம் மற்றும் 1.18 லட்சம் வரதட்சணை கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பின், அவற்றில் தலா 10 ஆயிரம் வழக்குகள், வேண்டுமென்றே மருமகளால் போடப்பட்ட வழக்குகள் என்பது தெரிய வந்தது. தேசிய குற்றப் பதிவகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

திருமண பந்தம் சிறப்பாக அமைய...

இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பு, குடும்ப மகிழ்ச்சி, அடிமை தனம் மாறுதல் உள்பட ஒவ்வொரு குடும்பமும் சிறப்பாக வாழ வேண்டுமானால், திருமண பந்தம் நன்றாக அமைய வேண்டும். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான். திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் கைகளிலும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் கைகளிலும்தான் இருக்கிறது. சமூகரீதியில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு பெயர்களில் புனிதமாக கருதப்பட்டாலும், உரிய வயதை அடைந்த இரு எதிர்பாலினர் இணைந்து வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தமாகவே திருமணம் விளங்குகிறது. திருமணம் என்பது இருவேறு மனம் மற்றும் உடல்களில் சங்கமமாக மட்டும் அல்லாமல் இருவேறு சமூகங்களின் பிணைப்பாகவும் மாறுகிறது. மேலும் இந்த நிகழ்வு புதிய உயிர்களை, உறவுகளை, உடைமைகளை தோற்றுவித்தல் போன்ற வேறுபல நிகழ்வுகளுக்கும் காரணமாகிறது. எனவே திருமணம் என்ற நிகழ்வை சட்டரீதியாக புரிந்து கொள்வது அவசியம்.

திருமணத்தின் முக்கிய நிர்பந்தமாக மணம் செய்துகொள்ளும் இருவரின் வயது, மண உறவுக்கான உடல்நிலை, மனநிலை, ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன. திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் திருமணத்தை சட்ட ரீதியாக பதிவு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குடியுரிமை, சொத்துரிமை, குழந்தைகளின் வாரிசு உரிமை போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான விவகாரங்களுக்கும் திருமணத்தை பதிவு செய்தல் என்பது அவசியமாகிறது. இந்த திருமணப்பதிவு, மதப்பழக்க-வழக்கங்களுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது.

மதநம்பிக்கை இல்லாதவர்கள், மதங்களைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களுக்கான திருமணப்பதிவு “சிறப்பு திருமணச் சட்டம்” என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. சாதிகளாலும், மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், மனங்களால் ஒன்றுபட்டவர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே இந்த சிறப்புத் திருமண சட்டத்தின் நோக்கம். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சட்டங்கள் மதம் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. குறிப்பாக (பழைய) இந்துச் சட்டம் சாதிகள் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. எனவே சாதிகளையும், மதத்தினையும் கடந்து திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த சட்டத்தின்கீழ்தான் திருமணம் செய்ய முடியும்.

Tags : Woman, life-saving, laws
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...